×

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023 ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது என தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர்.

The post வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய வழக்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : CBI ,Vengaiyal ,CHENNAI ,Chennai High Court ,Pudukottai district ,Venkaiwayal ,Chief Justice ,T.Krishnakumar ,Justice ,K.Kumaresh ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல்...