×
Saravana Stores

ஊட்டியில் சூறாவளி காற்று 48 மரங்கள் சரிந்து விழுந்தன: மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: ஊட்டியில் சூறாவளி காற்று வீசி வருவதால் 48 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரமே இருளில் மூழ்கியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் ஊட்டி, குந்தா குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைக்குந்தா முதல் ஷூட்டிங் மட்டம் வரை 4 இடங்களில் மரங்கள் விழுந்தன. கலெக்டர் பங்களாவிற்கு செல்லும் வழித்தடத்தில் 2 மரங்களும், தமிழகம் சாலையில் 3 மரங்களும், மேரிஸ் ஹில், தீட்டுக்கல், முள்ளிக்கொரை, ரோஜா பூங்கா செல்லும் சாலை, ஊட்டி கார்டன் மந்து ஆகிய பகுதிகளில் தலா ஒரு மரமும் விழுந்தன. ஊட்டி-குன்னூர் ரயில் பாதையில் பெர்ண் ஹில், கேத்தி மற்றும் லவ்டேல் பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நுந்தளாவில் ராட்சத மரம் விழுந்து கோயில் மற்றும் சாலை சேதமடைந்தது.

தீட்டுக்கல் பகுதியில் மரம் விழுந்து மினி பஸ்சும், லாரியும், தமிழகம் மந்து சாலையில் 4 கார்களும் சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 2014ல் இதேபோல ஊட்டி மற்றும் குந்தா பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

அப்போது 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அதன் பின்னர், தற்போதுதான் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. மின் கம்பங்களின் மீதும் மரங்கள் விழுந்ததால், நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் வீசிய பலத்த காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 19 இடங்களிலும், குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 15 இடங்களிலும், ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 3 இடங்களிலும் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

* 40 வீடுகளின் கூரைகள் சேதம்
பலத்த காற்று காரணமாக பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. காற்றின் வேகத்தால் ஊட்டி அருகில் உள்ள கோயில்மேடு கிராமமே உருக்குலைந்து காணப்படுகிறது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளின் கூரைகள் பெயர்ந்தது. கூரை ஓடுகள் தரையில் கிடக்கின்றன. 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

The post ஊட்டியில் சூறாவளி காற்று 48 மரங்கள் சரிந்து விழுந்தன: மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா