×

சங் பரிவாரை சமாதானப்படுத்த பாஜ நடவடிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆதரித்து ஆர்எஸ்எஸ் பிரசாரம் செய்யவில்லை. மக்களவை தேர்தலில் பாஜவின் மோசமான செயல்பாடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட சமீப நாட்களாக பாஜ அரசை விமர்சித்து கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, கடந்த 9ம் தேதியிட்ட ஒன்றிய அரசின் அரசாணையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், ’58 ஆண்டுக்கு முன் 1966ல் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான உத்தரவு மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது’’ என கூறியிருந்தார். இந்த முடிவை ஆர்எஸ்எஸ், பாஜ தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆர்எஸ்எஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘அரசியல் நலன்களுக்காக எந்த அடிப்படை ஆதாரமின்றி ஆர்எஸ்எஸ் மீது தடை விக்கப்பட்டது. கடந்த 99 ஆண்டுகளாக தேசத்தை மறுகட்டமைப்பு செய்வதில் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பங்கேற்று வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் அமைப்புகள் இணைந்து பசுவதையை குற்றமாக்கக் கோரி நாடாளுமன்றம் நோக்கி செல்லும் போராட்டத்தை நடத்தின. அதில் ஏற்பட்ட கலவரத்தில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர தடை விதித்தது. இதற்கு முன்பாக, 1948ல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தார். பின்னர் நன்னடத்தை உறுதிமொழி அளித்ததன் பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு 1966ல் கலவரத்திற்கு காரணமாக இருந்ததால் ஆர்எஸ்எஸ் மீது தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் உடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் தனது தாய் அமைப்பை சமாதானப்படுத்த இந்த தடையை பாஜ அரசு நீக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

* தடையை நீக்க அவசியம் என்ன?
இந்த தடை நீக்கம் மூலம், கருத்தியல் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், ஊழியர்களை கையகப்படுத்தி மோடி அரசியல் செய்ய விரும்புகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். இது வெட்கக் கேடானது என்றும், இந்த உத்தரவு மூலம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற பிற அரசு நிறுவனங்களை தங்களின் சங்கி அடையாளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என சிவசேனாவின் (உத்தவ்) பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

The post சங் பரிவாரை சமாதானப்படுத்த பாஜ நடவடிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Sangh Parivar ,RSS ,New Delhi ,Lok Sabha elections ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி கரும்புள்ளி: பாஜ கடும் தாக்கு