×

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி 12ம் தேதி திறந்து வைக்கிறார்: 1650 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை, பிரதமர் மோடி வருகிற 12ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக எம்பிபிஎஸ் படிப்பில் 1650 இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 25 அரசு மருத்துவ கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் எம்பிபிஎஸ் படிப்பில் 3,550 இடங்களும், பல்மருத்துவ படிப்பில் 194 இடங்களும் உள்ளன. இந்த நிலையில் புதிதாக ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ரூ.3,575 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. அதே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தாண்டே இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த 11 புதிய கல்லூரிகள் வருகிற 12ம் தேதி திறக்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 12ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது. திறப்பு விழாவை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை பரிசீலித்து வருகிறது. திறப்பு விழா விருதுநகரில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் பாதுகாப்பு கருதி சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்படலாம் என்ற மற்றொரு தகவலும் வருகிறது. விழா நடைபெறும் இடத்தை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த இடம் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழக சுகாதாரத்துறை அறிவிக்க உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வர உள்ளார். புதிதாக திறக்கப்பட உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரியிலும் 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 1,650 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 2021-2022ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி 12ம் தேதி திறந்து வைக்கிறார்: 1650 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,MBPS ,Chennai ,MBBS ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...