×

ஜிகா வைரசால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: சவுமியா சாமிநாதன் தகவல்

சென்னை: மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் உள்ளதால், மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை ஆலோசகர் சவுமியா சாமிநாதன் கூறினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை ஆலோசகர் சவுமியா சாமிநாதன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் கீழ் இயங்கி வந்த நிலையில், தற்போது பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பி.இ பயோமெடிக்கல் பாடப்பிரிவில் 60 இடங்களும், எம்.இ பாடத்தில் 36 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சியின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சவுமியா சாமிநாதன் கூறுகையில்: பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை மிகவும் முக்கியமானது. நாம் மருத்துவ துறையில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களை 99 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் நமது தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதில்லை. கால சூழல் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு மருத்துவ உபகரணங்களை நாமே உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வயதாகும்போது பயன்படுத்தப்படும் வீல் சேர் போன்ற மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகமாக உள்ளது. மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை இந்தியாவே முன்னெடுக்கலாம்.

காலநிலை மாற்றத்தால் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அதிக வெப்பம், வெள்ளம் போன்றவைகளை சமாளிக்க வேண்டியுள்ளதால் அதற்கேற்ப மருத்துவ தொழில் நுட்ப வளர்ச்சியின் தேவையும், மாசுபாடு குறித்த விழிப்புணர்வும் தேவையாக உள்ளது. நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மருத்துவ உபகரணங்களின் தேவை உள்ளது. தற்போது மனிதர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது. 2016ம் ஆண்டில் இருந்து ஜிகா வைரஸின் தாக்கம் அறியப்படுகிறது.

ஜிகா வைரஸின் தாக்கம் கடுமையானதாக இல்லாவிட்டாலும் புனேவில் ஒருவருக்கு தாக்கம் ஏற்பட்டு மூளை பாதிப்பு உருவாகியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். ‘‘ஒன் ஹெல்த் மிஷன்”என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. மனிதர்களுக்கு வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளை பயன்படுத்துவது போல் பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க விலங்குகளுக்கான தடுப்பூசி, வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜிகா வைரசால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: சவுமியா சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Soumya Saminathan ,CHENNAI ,Principal ,Department of Medical and Public Welfare ,Government of India ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்