×

கொடைக்கானலில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலையில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ளது குண்டுபட்டி கிராமம். இந்த பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளி சுற்றுச்சுவரின் ஒருபகுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: விடுமுறை தினத்தன்று பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அதிஷ்டவசமாக மாணவர்கள் தப்பியுள்ளனர். எனவே, அரசுப் பள்ளியில் கட்டிடங்களை உரிய முறையில் பராமரிக்கவும், இடிந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித்தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Kodaikanal school ,Kodaikanal ,Kodaikanal Melmalai ,Kundupatti ,Dindigul district ,Government Panchayat Union Middle School ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடியில்...