பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் 5 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு உட்பட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது முக்கிய நபர் திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதன்பிறகு 11 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மேலும் 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில். சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை தேடி வருகின்றனர். மேலும் இவர்களை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் ஹரிஹரன், அருள் உள்பட ஐந்து பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை செம்பியம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் புதிய தகவல்கள் தெரியவரும் என்று தெரிகிறது. இதனிடையே தற்போது சிறையில் உள்ள 16 பேரின் கடந்த கால செல்போன் அழைப்புகள் மற்றும் வங்கி பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களையும் தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர். இன்று காலை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. சென்னை அருகே உள்ள பட்டாபிராமை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் பி.ஆனந்தன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் 5 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.