×

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டமன்ற உரிமை குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

அதில், அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமை குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2வது நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமை குழு சார்பில் மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்கவிருந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், முதல்வர் உள்ளிட்ட எதிர்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் அவர்களின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு தீர்ப்பை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

The post சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Kudka ,Chennai High Court ,CHENNAI ,DIMUKA MLAS ,GUDKA ,Dinakaran ,
× RELATED பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான...