உடுமலை : மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம் அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த பயிர்கள் இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் சேதம் அடைந்தால் தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் காரீப், ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்து விவசாயத்தில் நிலைபெற செய்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி வேளாண்மை வளர்ச்சியை மேம்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அறிவிக்கை செய்யப்பட்ட உள்வட்ட (பிர்கா) அளவிலான பயிர்களை பயிரிடும் விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பயிர்கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பயிர்கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் விருப்பத்தின் பேரில் சேரலாம். பிர்கா அளவில் ஏற்படும் மகசூல் இழப்பு, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு, அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு பயிர் காப்பீடு பெற முடியும்.
கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். 2024-25 காரீப் பருவத்திற்கு மடத்துக்குளம், துங்காவி ஆகிய குறு வட்டங்களை (பிர்கா) சேர்ந்த தக்காளி, வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். காரீப் பருவ விவசாயிகளுக்கு பிரீமியம் தொகை செலுத்த 31.08.24 கடைசி தேதி ஆகும். 2024-25 ராபி பருவத்திற்கு தக்காளி பயிரிட்டுள்ள மடத்துக்குளம், துங்காவி குறு வட்டத்தை (பிர்கா) சேர்ந்த விவசாயிகளும், துங்காவி குறுவட்டத்தை (பிர்கா) சார்ந்த வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகளும் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
ராபி பருவ விவசாயிகளுக்கு 31.01.25 வரை ப்ரீமியம் தொகை செலுத்தலாம். காப்பீட்டு திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் 95 சதவீதம் தொகையும், விவசாயிகளின் பங்களிப்பு தொகை 5% ஆகும். வெங்காயம் பயிருக்கு 1 ஏக்கருக்கு ரூ.2228ம், தக்காளி பயிருக்கு 1 ஏக்கருக்கு ரூ.1495ம் பிரீமியம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் வெங்காயம் பயிருக்கு 1 ஏக்கருக்கு ரூ.44,550ம், தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.29,900ம் இழப்பீட்டு தொகையாக கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மேற்கூறிய இடங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம். பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.
உள்ளூர் பேரிடர் காரணமாக பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி 18002095959 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை வருவாய்த்துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு பயிர் சேதமதிப்பீட்டு அறிக்கை அளித்த பின்னர், இழப்பீட்டுத்தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 9659838787 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினியை 9952147266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.