×

திருப்பூர் மாநகரை கண்ணிமைக்காமல் கண்காணிக்கும் 3ம் கண்

*முக்கிய குற்ற வழக்குகளில் உதவியதாக போலீசார் தகவல்

திருப்பூர் : திருப்பூர் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.பின்னலாடை உற்பத்தியில் உலக அளவில் பிரசித்தி பெற்ற மாநகரமாக உள்ளது திருப்பூர். பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பணிபுரிவதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடிப்பெயர்ந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, லட்சக்கணக்கான பொதுமக்கள் வசிக்கக்கூடிய மாநகரமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரக்கூடிய நிலையில் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதிலும் அதனை கட்டுப்படுத்துவதிலும் போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக கண்காணிப்பு கேமராக்கள் தற்போது கண் இமைக்காமல் திருப்பூர் மாநகரை கண்காணித்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 8 காவல் நிலையங்கள் தலா 2 போக்குவரத்து மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.

மாநகரின் குற்ற சம்பவங்களை தடுக்கக்கூடிய வகையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து பணியும் மேற்கொள்ளப்படுவதோடு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்கள் பொதுமக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தினந்தோறும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் புறக்காவல் நிலையம் மற்றும் போலீஸ் பூத் ஆகியவை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் போலீசாருக்கு பேருதவியாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதன் காரணமாக மாநகர போலீஸ் சார்பில் 442 இடங்களில் 1200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக கூடிய காட்சிகள் அந்தந்த காவல் நிலையங்களிலேயே கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிராதமாக கூடுதல், சந்தேகப்படும்படியான நடமாட்டம், சண்டைகள் உள்ளிட்டவை கண்காணித்து ரோந்து பணியில் உள்ள போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விடுகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசார் சார்பில் மாநகராட்சி சந்திப்பு, தாராபுரம் சாலை சந்திப்பு, மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா, வீரபாண்டி பிரிவு, எஸ்ஏபி தியேட்டர் சிக்னல், வளர்மதி எம்ஜிஆர் சிலை சிக்னல், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கண்காணித்து வருகின்றனர்.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மேலும் சாலை விபத்துகளில் நடந்த உண்மை சம்பவங்களை கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலம் தெளிவுபடுத்துகின்றனர். சாலை விதிகளை மீறுபவர்களும் கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பில் சிக்கி கொள்கின்றனர்.

திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று சூட் கேசில் அடைத்து சாக்கடையில் வீசி சென்ற வழக்கு, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல், ரயில் பயணத்தில் பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருந்துள்ளது. ரயில்வே போலீசார் சார்பில் ரயில் நிலைய முன்பதிவு அறை, டிக்கெட் வழங்கும் இடம், இரண்டு தண்டபாளங்கள், சரக்கு புக்கிங் அறை உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளனர்.

இது குறித்து மாநகர போலீசார் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதனை பொறுத்து குற்ற சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்திட கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவி புரிகின்றன. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பயனுள்ளதாக உள்ளன. காவல்துறையினர் மட்டுமல்லாது பொதுமக்களும் முன்வந்து தங்கள் நிறுவனம் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திட வேண்டும்.

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கண்காணிப்பு கேமராக்களின் மீது ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது. கண்காணிப்பு கேமராவும் ஒரு காவலாளி என்பதை மனதில் கொண்டு பொதுமக்கள் அதனை தங்கள் இடங்களில் நிறுவி கொள்ள முன்வர வேண்டும்’’ என்றனர்.

சுழலும் கேமராக்களுடன் நடமாடும் வாகனம்

திருப்பூரில் மாநகர காவல்துறைக்கு 360 டிகிரி சுழலும் கேமராக்களுடன் கூடிய நடமாடும் வாகனம் உள்ளது. இது போராட்டம் நடைபெறும் இடங்களில் போராட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து பதிவு செய்கிறது. இதன் மூலம் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் கண்காணித்து தடுக்க முடிகிறது.

காவல்துறைக்கு உதவியாக மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு ஒரு குரல் புரட்சி என்னும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்கள் என 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திலிருந்து கண்காணிக்கின்றனர். பல்வேறு வழக்குகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள கேமராக்கள் காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்துள்ளது.

The post திருப்பூர் மாநகரை கண்ணிமைக்காமல் கண்காணிக்கும் 3ம் கண் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியுதவி