மஞ்சூர் : மஞ்சூர் அருகே பெங்கால் மட்டத்தில் கான்கிரீட் நிழற்கூரை பழுதடைந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது பெங்கால் மட்டம். இப்பகுதியில் கடைவீதியை ஒட்டி பயணிகள் நிழற்கூரை அமைந்துள்ளது. பெங்கால்மட்டம், மாசிகண்டி, கோக்கலாடா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு மஞ்சூர், ஊட்டி, குன்னுார் போன்ற பகுதிகளுக்கு செல்ல அரசு பஸ்களுக்காக மேற்படி நிழற்குடையில் காத்திருப்பது வழக்கம். பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் நிழற்குடை பெரிதும் பயன் அளித்து வந்தது.
இந்நிலையில் பல ஆண்டுகள் ஆனதால் பழுமை காரணமாக கான்கிரீட் நிழற்கூரை பழுதடைந்து காணப்பட்ட நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரையின் உட்புற பகுதியில் விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்துள்ளது. இவ்வழியாக மழைநீர் ஒழுகுவதால் மேலும் இடியும் அபாயம் உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பயணிகள், பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என சமூக அக்கறை கொண்ட அப்பகுதியினர் நிழற்கூரை வெளியே எழுதி வைத்துள்ளனர்.
இதனால் தற்போது பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ, மாணவிகள் பேருந்துகள் வரும் வரை ஒதுங்க இடமின்றி மழையில் நனைந்து வெட்ட வெளியில் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் பழுதடைந்த கான்கிரீட் நிழற்கூரையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்கால் மட்டம் பகுதி கிராம மக்கள் வலியுறுத்தினர்.
The post பெங்கால் மட்டம் பகுதியில் பழுதான கான்கிரீட் நிழற்கூரை பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.