×

பருவமழை துவங்க இருப்பதால் கோமுகி அணையில் ஷெட்டர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

சின்னசேலம் :பருவமழை துவங்க உள்ளதால் கோமுகி அணை ஷெட்டர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது.

இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் புதிய பாசன கால்வாய் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் கோமுகி அணையின் அடிவாரத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் இருந்து கடத்தூர், தெங்கியாநத்தம், பைத்தந்துறை வழியாக தென்செட்டியந்தல் ஏரிக்கு சென்று நிரம்பிய உடன் சின்னசேலம் ஏரிக்கு செல்லவும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது கோமுகி அணையில் பழைய ஷெட்டர், புதிய ஷெட்டர் என இரண்டு உள்ளது.

இந்த நிலையில் அணை கட்டப்படும்போது பொருத்தப்பட்ட இரண்டு ஷெட்டர்களையும் மாற்றிவிட்டு, அணையின் பாதுகாப்பு கருதி புதிய ஷெட்டர்களை பொருத்த பொதுப்பணித்துறை நிர்வாகம் முடிவு செய்யப்பட்டு, நபார்டு திட்டத்தில் அதற்காக ரூ12.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அதற்கான பணி தொடங்கப்பட்டது. தற்போது இரண்டு தானியங்கி ஷெட்டர்களை பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது 75 சதவீத வேலைகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க அறிவுரை கூறி உள்ளார்.

இந்நிலையில் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பொழிய வாய்ப்பு உள்ளன. தற்போது மழை பெய்தபோது மலையில் இருந்து வந்த நீரை ஏரிகளுக்கு திறந்து விட்டதன்மூலம் 5க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளது. ஆகையால் நீர்வள ஆதார மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது கோமுகி அணைக்கு வந்து பணியை ஆய்வு செய்வதுடன், புதிய ஷெட்டர்கள் பொருத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பருவமழை துவங்க இருப்பதால் கோமுகி அணையில் ஷெட்டர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Komuki Dam ,Chinnasalem ,Kalvarayanmalayam ,Kachirayapalayam ,Komuki river ,Kallakurichi ,
× RELATED சின்னசேலம் அருகே நண்பரின் மனைவியை...