×

நாவல் பழங்கள் சாப்பிடுவதற்காக தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகள்

* பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நாவல் பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் அதனை சாப்பிடுவதற்காக கிராமங்களை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வர துவங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, குந்தா, குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது நாவல் பழ சீசன் என்பதால் நாவல் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. பலரும் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உள்ள நாவல் மரங்களில் இருந்து பழங்களை பறித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த பழம் என்பதால் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர். இதேபோல பலரும் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்கின்றனர்.

இதனிடையே நாவல் பழங்களை கரடிகள், மலபார் அணில்கள் போன்றவைகள் சாப்பிட்டு வருகின்றன. நாவல் பழங்கள் அதிகம் இருப்பதால் கரடிகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலேயே உலா வருகின்றன. இதனால் நாவல் பழங்களை பறிக்க செல்ல கூடிய பொதுமக்கள் கரடி தாக்குதலுக்கு ஆளாக கூடிய சூழல் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தனியாக செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் கரடிகள் உலா வருவது அறியும் பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், ‘‘நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாவல் மரங்களில் பழங்கள் காய்த்துள்ளன. இவற்றை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உட்கொண்டு வருகின்றன. இவற்றை பறிப்பதற்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர். அவர்கள் எதிர்பாராத விதமாக கரடி தாக்குதலுக்கு உள்ளாக கூடிய அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்றனர்.

The post நாவல் பழங்கள் சாப்பிடுவதற்காக தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகள் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiris ,Forest Reserve ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்