×

மேட்டுப்பாளையம் பாலப்பட்டியில் 2 நாட்களாக ஒரே இடத்தில் கிடந்த 13 அடி நீள அரியவகை ராஜநாகம்

*வனப்பகுதியில் விடுவிப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பாலப்பட்டியில் 2 நாட்களாக ஒரே இடத்தில் கிடந்த 13 அடி நீள அரியவகை ராஜநாகம் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று காலை பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் ராஜநாகம் ஒன்று தென்பட்டது. ஊர்ந்து செல்ல முடியாத நிலையில் அந்த நாகம் இருந்து. இதை கண்டு அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் காஜாமைதீன் தலைமையிலான பாம்பு பிடி வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து ராஜநாகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அரியவகை மற்றும் கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை நெருங்குவது சற்று கடினம். இருந்தபோதிலும் சாமர்த்தியமாக பாம்பு பிடி வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பாம்பின் உடல்நிலை குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உணவு எதுவும் உட்கொள்ளாததால் சோர்வான நிலையில் பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உரிய முதலுதவிக்கு பின்னர் பிடிபட்ட ராஜநாகத்தை வனத்துறையினரின் உதவியுடன் பாம்பு பிடி வீரர்கள் குஞ்சப்பனை அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘பிடிபட்ட பாம்பு கொடிய விஷமுள்ள அரிய வகை ராஜநாகம். இந்த நாகப்பாம்பு 2 நாட்களாக ஒரே இடத்தில் கிடந்தள்ளது. இந்த வகை பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டாலும் இதுபோல் ஒரே இடத்தில் சோர்வுடன் காணப்படும். கடந்த 2 தினங்களாக உணவு ஏதும் உட்கொள்ளாத காரணத்தால்தான் இந்த பாம்பால் அந்த இடத்தைவிட்டு நகர இயலவில்லை. தற்போது அதற்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவித்துள்ளோம்’’ என்றனர்.

The post மேட்டுப்பாளையம் பாலப்பட்டியில் 2 நாட்களாக ஒரே இடத்தில் கிடந்த 13 அடி நீள அரியவகை ராஜநாகம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam Balapatti ,Mettupalayam ,Balapatti ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி...