×

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் 1000 ஆண்டு பழமையான நெல் குடோனை பார்த்து வியந்த மாணவர்கள்

களக்காடு : களக்காட்டில் உள்ள சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் பழங்கால சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் அரிய வகை சிற்பங்கள், காலத்தால் அழியாத மூலிகை ஓவியங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள நந்தவனத்தில் 50க்கும் மேற்பட்ட இயல் தாவரங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த தாவரங்களுக்கும், கோயிலுக்குமான தொடர்புகள் குறித்தும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலின் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு ‘ஏ ட்ரி’ அறக்கட்டளை சார்பில் பல் உயிர்ச் சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்வு நடந்தது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், இயற்கை மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு கோயில் வரலாறு மற்றும் அங்குள்ள நந்தவனத்தில் பராமரிக்கப்படும் தாவரங்கள், மரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது கோயிலின் வெளி பிரகாரத்தில் அமைந்துள்ள பழங்கால நெல் குடோனின் பழமையும் பெருமையும் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த குடோன் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

இங்கு பழங்காலத்தில் நெல் மற்றும் தானியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த விதம் குறித்து அறிந்த மாணவர்கள், இயற்கை மற்றும் பாண்பாட்டு ஆர்வலர்கள் அதை வியப்புடன் பார்த்தனர். மேலும் கோவில் நந்தவனம் என்பது கோயிலின் பசுமை வேலியாக மட்டுமல்லாமல் நம் மண்ணின் தாவரங்களின் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்றும், கோயில்கள் ஊருக்குள் இருப்பதால் ஊரின் பசுமையையும் நந்தவனங்கள் பிரதிபலிப்பாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நந்தவனங்களின் மூலம் தாவரங்கள் மட்டுமல்லாது பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், ஊர்வன விலங்குகள், சிறிய பாலூட்டிகள் என பல வகையான உயிரினங்களின் உணவு மற்றும் வாழ்விட தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்றும் பெருமையுடன் அக்குழுவினர் தெரிவித்தனர்.

The post களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் 1000 ஆண்டு பழமையான நெல் குடோனை பார்த்து வியந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kalakadu Sathyawageeswarar temple ,Kalakkad ,Sathyawageeswarar Gomati Ambal ,King ,Veeramarthanda ,Nandavan ,Kalakkadu Sathyawageeswarar Temple ,
× RELATED களக்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழா