புதுச்சேரி, ஜூலை 22: பொருட்களுக்கு ரூ.6 லட்சம் அனுப்பியதாக கூறி புதுவை நபரிடம் மர்ம நபர்கள் மோசடிக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை கதிர்காமம் பகுதியை சேர்ந்த தவல் மோடி என்பவர் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தவல் மோடியை தொடர்பு கொண்டு பொருட்கள் வாங்குவதாக கூறி, ரூ.6.83 லட்சத்தை அனுப்பி விட்டதாக போலி குறுந்தகவலை அனுப்பி மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தவல் மோடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மடுகரை பகுதியை சேர்ந்த தேவசேனா என்பவர் அழகு சாதன பொருட்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார். அப்போது மர்ம நபர் தேவசேனாவை தொடர்பு கொண்டு பொருட்களை வாங்க முன்வைப்பு தொகை, ஜி.எஸ்.டி மற்றும் டெலிவரி கட்டணம் ஆகியவற்றை செலுத்துமாறு கூறியுள்ளார். இதைநம்பி தேவசேனா ரூ.1.28 லட்சம் அனுப்பியுள்ளார்.
பல நாட்கள் ஆகியும் ஆர்டர் செய்த பொருட்கள் வராததால், தேவசேனா மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. மேலும், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு வேலைக்கு பதிவு கட்டணமாக ரூ.10 அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பி தங்கமணி தவறுதலாக ரூ.15 ஆயிரம் அனுப்பி, மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
மேலும் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதைநம்பி ரம்யா ரூ.21 ஆயிரம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பொருட்களுக்கு ரூ.6 லட்சம் அனுப்பியதாக கூறி புதுவை நபரிடம் நூதன மோசடி முயற்சி appeared first on Dinakaran.