×
Saravana Stores

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட மாற்றங்கள் என்னென்ன? அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சிறப்பாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை களை எடுக்கலாமா என்பது குறித்தும், பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் தி.மு.க.வில் சேர்க்க என்னென்ன யுக்திகளை பயன்படுத்தலாம்? அரசியல் களத்தில் சமூக வலைத்தளங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவை வலுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியை பலப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து கட்சி தலைமைக்கு பரிந்துரைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

The post 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : 2026 assembly elections ,DMK Election Coordination Committee ,Chennai Anna Vidyalaya ,Chennai ,Anna Vidyalaya, Chennai ,DMK ,2026 Tamil Nadu assembly elections ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…