×

நாமக்கல்லில் விதிமீறி இயக்கப்பட்ட 8 தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் நகரில் விதிமீறி இயக்கப்பட்ட 8 தனியார் பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்து ஆர்டிஓ நடவடிக்கை எடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் நிகழாமல் தடுக்க, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இயக்கப்படும் வாகனங்களை கண்காணித்து, விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் நகரில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், சொந்த வாகனங்களை பயன்படுத்தி மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு சில பள்ளிகள் தனியார் டிராவல்ஸ் வாகனங்களில் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கிறார்கள். இந்த வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர், நேற்று நாமக்கல்-திருச்சி ரோடு, பூங்கா ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகிய இடங்களில், காவல்துறையினருடன் இணைந்து வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த டிராவல்ஸ் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 8 வாகனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்தாமல் இயக்கி வருவது தெரியவந்தது. மேலும் தகுதி சான்றை புதுப்பிக்காமலும், இன்சூரன்ஸ் செலுத்தாமலும் வாகனங்களை இயக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 8 பள்ளி வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 வாகனங்கள் உரிய அனுமதி சீட்டு பெறாமல், வாடகை வாகனமாக இயக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 8 பள்ளி வாகனங்களும், நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறுகையில், ‘நாமக்கல் நகரில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின் போது, 75 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மொத்தம் ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 8 தனியார் பள்ளி வாகனங்களும், அரசுக்கு சாலை வரி செலுத்தவில்லை. மேலும், தகுதி சான்றையும் புதுப்பிக்கவில்லை. இன்சூரன்சும் கட்டவில்லை. பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகன உரிமையாளர்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படக்கூடாது. தனியார் பள்ளி நிர்வாகிகளும், இதனை கண்காணிக்க வேண்டும். இதுபோன்று விதிமுறை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது, தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகன உரிமையாளர்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படக்கூடாது.

The post நாமக்கல்லில் விதிமீறி இயக்கப்பட்ட 8 தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,NAMAKAL: RTO ,NAMAKAL CITY ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!