சிறப்புச்செய்தி
ஜங்க்புட் என்னும் துரித உணவுகள் நாவிற்கு சுவை தரும். ஆனால் மனித உடலுக்கு எந்தவித ஊட்டச்சத்தையும் தராது. இதுபோன்ற உணவுகளை குப்பை உணவுகள் என்று உணவியல் நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை உண்போர், ஒரு நாள் மட்டும் இதுபோன்ற உணவுகளை உண்ணலாம். இது துரித உணவுகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வாகவும் அமையும். இந்த இலக்கோடு சர்வதேச குப்பை உணவுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஜூலை 21ம்தேதி (இன்று) உலக குப்பை உணவுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் குப்பை உணவுகள் என்றால் என்ன? என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல உணவு என்பது சுவையில் சற்று குறைந்திருந்தாலும் அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்க வேண்டும். அதேபோல் அதிகம் கொழுப்பு மற்றும் உப்பு, சர்க்கரை இல்லாமலும் இருக்க வேண்டும்.
இந்தவகையில் தற்போது நாம் வயது வித்தியாசம் இல்லாமல் உட்கொள்ளும் நொறுக்குத்தீனிகள், சாக்லெட், குளிர்பானங்கள், மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்ற தின்பண்டங்கள் என்று அனைத்துமே குப்பை உணவுகள் தான். மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் துரித உணவுகளை உட்கொள்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக இதை பசியாற்றும் உணவாக உண்ணும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் தொடரும் இந்த வழக்கம், பல்வேறு நோய் அபாயங்களுக்கு வித்திட்டு வருகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இது குறித்து உணவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: உலகளவில் துரித உணவுகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை சூழலில் ஆர்டர் கொடுத்து உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துரிதஉணவுகளின் வர்த்தகமும் கோடிக்கணக்கில் பெருகியுள்ளது. இதனால் சமீப ஆண்டுகளாக தரம் என்பதை விட, வர்த்தகம் சார்ந்தே துரித உணவுகள் அதிகளவில் தயாராகி வருகிறது. இதனால் பல்வேறு நோய்பாதிப்புகளும் மனிதர்களை தொட்டுத் தொடர்ந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும், நீரிழிவு, புற்றுநோய், இதயநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கு குப்பை உணவுகள் என்னும் துரித உணவுகளும் ஒரு முக்கிய காரணம் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
புரதம், வைட்டமின், கனிம சத்துக்கள் மிகக்குறைந்த அளவு இருப்பது அல்லது இல்லாமலேயே இருப்பது துரித உணவு. மிகுந்த உப்பும் கொழுப்புமே இந்த உணவுகளில் பிரதானமாக உள்ளது என்று தேசிய சத்துணவு கழகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 1990ம் ஆண்டு வாக்கில் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இதயநோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்ைக 29சதவீதமாக இருந்தது. இது 2000ம் ஆண்டு 37சதவீதம், 2010ம் ஆண்டு 53சதவீதம் என்று உயர்ந்தது. 2020ம்ஆண்டு நிலவரப்படி 58சதவீதமாக உள்ளது. அடுத்த 10ஆண்டுகளில் இது மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பரவலில் அதிகமாக சிக்கியுள்ளோர், துரித உணவுகளில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
எனவே தொடரும் அபாயங்களை தவிர்க்க பெரும் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம். துரித உணவுகளின் தீமை குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மை குறித்தும் பொதுமக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்குழந்தைகளிடம் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் துரிதஉணவுகள் விற்பது தடை செய்யப்பட வேண்டும். பிரபலங்களும் குழந்தைகளை திசைதிருப்பும் துரித உணவுகளுக்கு விளம்பர தூதுவர் ஆவதை தவிர்க்க வேண்டும். இதற்குரிய உறுதியை இந்த நாளில் எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு உணவியல் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
3% உப்பை குறைத்தால் பாதிப்புகளும் குறையும்
‘‘உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது 40.9மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2025ம் ஆண்டு 69.9மில்லியனாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. துரித உணவுகளால் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. பெண்குழந்தைகள் விரைவில் பூப்படைவதற்கும் துரித உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. மனிதர்கள் உண்ணும் உணவுகளில் பிரதானமாக இருப்பது உப்பு. நாம் உண்ணும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே 50சதவீதம் உயர் ரத்தஅழுத்தமும், 22சதவீதம் பக்கவாதமும், 16சதவீதம் இதயநோய்களும் குறையும்,’’ என்பது உலகஇருதய கழகம் வெளியிட்டுள்ள தகவல்.
The post நாவிற்கு ருசியூட்டி உடலுக்கு தீங்கு செய்யும்… துரித உணவுகளால் அதிகரிக்கும் இதயநோய்: விழிப்புணர்வு நாளில் நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.