×

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளைம் வழியாக செல்லும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பின் பிரதான குழாய் வழியாக மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரூற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், மகாலிங்கபுரம், கேஆர்ஜிபி நகர், கந்தசாமி நகராட்சி பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

பின்னர், மேல்நிலை தொட்டியிலிருந்து குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம், மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரூற்று நிலையத்திலிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரானது, மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது.

முதலில் லேசாக கசிந்தவாறு சென்ற தண்ணீரானது, நேரம் செல்ல செல்ல பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு ஆறுபோல் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையறிந்த நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் நீரேற்றத்தை நிறுத்தினர். பின்னர், சிறிது நேரத்தில், பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டினர். சுமார் 5அடி ஆழத்துக்கு தோட்டப்பட்டு, அதில் ஏற்பட்ட பழுதுகளை கண்டறிந்து, பின் சில மணிநேரத்தில், குழாய் சீரமைக்கப்பட்டு, அதில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Pollachi bus station ,Pollachi ,Ambarampalaim ,Market Road ,Mahalingapuram ,KRGB Nagar ,Kandasami Municipal Park ,
× RELATED வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு