மதுரை: மதுரை திருமலைநாயக்கர் மகாலின் ஒரு மாடத்தில் உள்ள 153 வயது கொண்ட கடிகாரம் 2 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதற்கு உயிர்கொடுத்து காக்க வேண்டும் என்று பழமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் தொன்மை அழகுப் பொக்கிஷங்களில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மகால். இந்த மகாலின் உயர்ந்த இரு மாடங்களில் ஒன்றில் அழகான ‘டவர் கடிகாரம்’ இப்போதும் நல்ல நிலையில் இருக்கிறது. இந்த கடிகாரத்தின் பெரிய முள், ஒன்றே முக்கால் அடி நீளமும், ஒன்றரை கிலோ எடையும் கொண்டது. சின்ன முள் முக்கால் அடி நீளத்துடன், ஒரு கிலோ எடையுடன் இருக்கிறது. கடிகார டயல் மட்டுமே 36 அங்குல விட்டத்தில் அமைந்துள்ளது. இக்கடிகாரத்தை ‘சவுண்டர் வெயிட் கிளாக்’ என்கின்றனர். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒலிக்கும் கடிகாரச் சத்தம் ஒரு கிமீட்டர் சுற்றளவிற்கு கேட்கும் திறன் மிக்கது.
இதற்கென இயங்கும் பெண்டுலம் 20 கிலோ எடையுடன், ஒரு மீட்டர் நீளம் உடையது. ஒரு புறத்திலிருந்து, ஓசை தரும் வெண்கல மணி 200 கிலோ எடை கொண்டது. 1871ல் ஆங்கிலேய கவர்னர் லார்டு நேப்பியர் நிறுவிய இக்கடிகாரம், லண்டனில் தயாரானது. கடிகார சாவி மட்டுமே 2 கிலோ எடையில் இருக்கிறது. முற்கள் ஓடவும், சத்தம் ஒலிக்கவும் என இரு பணிகளுக்கும் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை 60 சுற்றுகளாக இரு பகுதிகளில் சாவி கொடுக்க வேண்டும். 25 அடி நீள இரும்புக் கயிற்றில் இருபுறமும் எடைகளை சுமந்தபடி இக்கடிகாரம் இயங்குகிறது. எண்கள் முன்பு ரோமன் வடிவிலும், தற்போது அரபிய எழுத்துகள் வடிவிலும் இருக்கின்றன.
உயர்ந்த மாடத்தின் மீதுள்ள இக்கடிகாரத்திற்கு சாவி கொடுக்க, தரையிலிருந்து வளைந்து செல்லும் 36 தேக்கு மரப்படிகளில் பயணிக்க வேண்டும். இக்கடிகாரம் இப்போதும் முறையாக சாவி கொடுத்தால் இயங்கும் நிலையிலேயே இருக்கிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இக்கடிகாரத்தை பயன்பாடின்றி போட்டு வைத்துள்ளனர்.
* தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும்போது,
‘‘இக்கடிகாரத்திற்கு 153 வயதாகிறது. இந்த கடிகாரம் கடந்த 1913ல் பழுதடைந்து சரிசெய்யப்பட்டு, மீண்டும் சில ஆண்டுகளில் பழுதானது. 2001ல் கடிகார பழுதுநீக்குவோர் சங்கம் சரிசெய்து தந்தனர். பிறகு மீண்டும் அது பழுதான நிலையில் 2009 ஆக.13ல் சென்னை நிறுவனத்தினர் சரிசெய்தனர். நல்ல நிலையில் இருந்தும் முறையாக சாவி கொடுக்காதது, சிறு பழுது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக இக்கடிகாரம் இயங்காத நிலையில் இருக்கிறது. கழுகுமலையை சேர்ந்த ஒரு நிறுவனத்தினரை அணுகி இதனை சீரமைக்கும் முயற்சிகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. இந்த நிதியை எதிர்பார்த்து கடிகாரம் காத்திருக்கிறது’’ என்றனர்.
* மதுரையின் பழமை ஆர்வலர்கள் கூறும்போது,
‘‘மதுரையின் வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கும் இந்த கடிகாரம் சரி செய்யப்பட்டு, மீண்டும் சரியான நேரத்ததை காட்ட வேண்டியது பழமையின் பெருமையை காக்க வேண்டியதன் அவசியம்’’ என்றனர்.
The post திருமலை நாயக்கர் மகாலின் மாடத்தில் 153 வயது கடிகாரம்; 2 ஆண்டுகளாக பழுது: சீரமைக்க பழமை ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.