சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 19 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் ₹5 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் கட்டுமான பணிகளை சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:8 துறை சார்ந்த வல்லுனர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பல்வகை பேரிடர் கண்காணிப்பு மற்றும் பேரிடர் தாக்கம் குறித்து முன்னறிவிப்பு செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. 100 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பணியாற்றும் வகையில் வார்-ரூம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டிட பணிகள் மூன்று வாரத்திற்குள் நிறைவடையும்.
வழக்கமாக மழை வரும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த முறை வெள்ளம் வந்ததாக கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நீர் நிலைகளில் எவ்வளவு நீர் இருக்கிறது, எவ்வளவு நீர் வரும், எந்தெந்த பகுதிகளில் நீர் வர வாய்ப்பு இருக்கிறது என கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் மழை நீரை வெளியேற்றுவது குறித்து டெக்னிக்கல் ஆடிட் ரிப்போர்ட் பெற்று எங்கேனும் மழை நீர் வடிகால் கட்டமைப்பு விடுபட்டிருந்தால் அதனையும் சரி செய்ய அறிவுறுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 19 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். வடசென்னை பகுதியில் கொசஸ்தலை ஆறு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 75 சதவிகித பணிகள் முடிந்துள்ளன.
The post சென்னை மாநகராட்சியில் 19 இடங்களில் நிவாரண முகாம் அமைக்கப்படும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் appeared first on Dinakaran.