×

பல்வேறு துறைகளில் சிறந்த தீர்ப்பு வழங்கி உள்ள ஐகோர்ட் கிளையின் உத்தரவுகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம்

மதுரை: ஐகோர்ட் கிளையின் உத்தரவுகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். ஐகோர்ட் கிளையின் 20ம் ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், சுந்தரேஷ், விஸ்வநாதன், மகாதேவன், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், அரசு வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஐகோர்ட் கிளையின் 20வது ஆண்டு நினைவாக ஐகோர்ட் கிளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: அனைத்து நிலைகளில் இருப்பவர்களுக்கும் நீதி கிடைப்பதை மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது.மதுரை அமர்விலிருந்து சில நல்ல நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்காக எடுத்துக் கொண்டோம். அதற்காக வழக்கறிஞர் சங்கங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகள் சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. மதுரை அமர்வு பல்வேறு துறைகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, திருநங்கை பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. வருங்காலத்தில் டெல்லி (உச்ச நீதிமன்றம்) வழக்கறிஞர்கள், மதுரை வழக்கறிஞர்களை தேடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஐகோர்ட் கிளையை அமைத்தவர் கலைஞர்
முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியால் மதுரைக்கு ஐகோர்ட் கிளை கிடைத்தது. சென்னை ஐகோர்ட்டின் கிளை, மதுரையில் அமைய கடந்த 1973ல் முயற்சி எடுத்தவர் கலைஞர். கடந்த 1996ல் முதல்வராக இருந்த கலைஞர், ஐகோர்ட் கிளை கட்டுவதற்கு நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டு, அதற்காக ரூ.5 கோடியை ஒதுக்கினார். கடந்த 2000ல் திமுக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஐகோர்ட் பணிகளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2004ல் திறக்கப்பட்டது. தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு சென்று அலையாமல் இருக்க, மதுரையில் ஐகோர்ட் கிளையை நிறுவினார். 20 நீதிமன்ற அரங்குகள், நூலகம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.

The post பல்வேறு துறைகளில் சிறந்த தீர்ப்பு வழங்கி உள்ள ஐகோர்ட் கிளையின் உத்தரவுகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chief Justice ,Chandrachud Pukhazaram ,Madurai ,Supreme Court ,Madurai Tamukkam Maidan ,Chief Justice DY Chandrachud ,Chandrachud ,
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...