×
Saravana Stores

வீட்டை விட்டு வெளியே வராமல் குப்பை, பூரான், எலி, பல்லியுடன் 5 ஆண்டாக வாழும் தாய், மகள்: ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உயிர் பிழைப்பு; 3 டன் குப்பைகளை அள்ளிய மாநகராட்சி

கோவை: வீட்டை விட்டு வெளியே வராமல் கடந்த 5 ஆண்டுகளாக குப்பை, பூரான், எலி, பல்லியுடன் தாய், மகள் வசித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 2வது மாடியில் 35 வயது மகளுடன் 60 வயது தாய் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அவசர தேவை இருந்தால் மட்டுமே வெளியே சென்று வருவதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினருடனும் பேசுவதில்லை. வீட்டில் இருந்து எந்த குப்பைகளையும் வெளியே கொண்டு போடுவதும் இல்லை. இதனால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வசிக்கும் சிலர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் குப்பை கிடங்காக காட்சியளித்தது. தாய், மகள் கடந்த 5 ஆண்டாக வீட்டை விட்டு வராமல் தொடர்ந்து வீட்டில் முடங்கி கிடந்துள்ளதாக தெரிகிறது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். எப்போதாவது வீட்டில் சமையல் செய்துள்ளனர். வீட்டில் மீதமான உணவுகளை வெளியே போடாமல் வைத்திருந்தனர். இந்த பழைய கெட்டு போன உணவுகளை சாப்பிட எலி, கரப்பான் அதிகமாக குவிந்துள்ளது. படுக்கையறையில் மலைபோல் குப்பைகள் இருந்து உள்ளன. அதில்தான் இருவரும் தூங்கி உள்ளனர்.

தகவலறிந்து மாநகராட்சி சுகாதார பிரிவினர் நேற்று அங்கு சென்று வீட்டில் இருந்த 50 மூட்டைகளில் 3 டன் குப்பைகளை அள்ளி சென்றனர். வீட்டை சுத்தமாக பராமரிக்கவும், சுகாதார கேடு ஏற்படுத்தி நோய் பரப்பும் வகையில் செயல்பட கூடாது எனவும் அறிவுறுத்தினர். ஜன்னலை அடைத்து வைத்து கதவு திறக்காமல் இருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் இல்லாமல் இருந்தனர். ஆனால், இதையும் மீறி துர்நாற்றம் அதிகமான நிலையில் மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர். 5 ஆண்டாக தாய், மகள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்களா?, இவ்வளவு நாட்கள் எப்படி வீட்டிற்குள் இருக்க முடியும் என அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,‘‘தாய், மகள் இருவரும் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. ஏதோ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருக்கிறார்கள். பல ஆண்டாக இப்படித்தான் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இவர்களது வீடு மிக பெரிது. நல்ல வசதியுடன் இருப்பதால் தேவையானதை வாங்கி கொள்கிறார்கள். இவர்களுக்கு செலவுக்கு தேவையான பணத்தை உறவினர்களும் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்கள். இவர்கள் இப்படியே இருந்தால் அவர்களின் நிலைமை மிக மோசமாகிவிடும். எனவே, அதிகாரிகள் இரண்டு பெண்களை மீட்டு வீட்டை சுத்தப்படுத்தி கவுன்சலிங் கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post வீட்டை விட்டு வெளியே வராமல் குப்பை, பூரான், எலி, பல்லியுடன் 5 ஆண்டாக வாழும் தாய், மகள்: ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உயிர் பிழைப்பு; 3 டன் குப்பைகளை அள்ளிய மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kattur ,Coimbatore.… ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள்...