×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனைகள் தந்த திட்டங்களின் பயன் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம்: வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலம்; ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை பாராட்டு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனைகள் தந்த திட்டங்களின் பயன்களால், வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடமும், 13 இனங்களில் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம் என ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய நான்காவது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதை பறைசாற்றியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. காலநிலை மாற்றம் – சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும், பசிப் பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவ மின்மையை குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான மகளிர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர்க்கு கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயண திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களால் குடும்ப பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.

அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தலைசிறந்து விளங்குகிறது என்பது உள்பட 11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது. இவையெல்லாம், தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் கூடிய சிறந்த சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சிக்கான சான்றுகளாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனைகள் தந்த திட்டங்களின் பயன் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம்: வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலம்; ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,M.K.Stalin ,Union Government's Finance Commission ,Chennai ,M.K.Stal ,Union Government ,M.K. ,Tamil ,Nadu ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரம்...