×

கடலூரில் தாய், மகன், பேரன் கொலையில் எதிர்வீட்டு வாலிபர், நண்பருடன் கைது: தாய் தற்கொலைக்கு பழிதீர்த்ததாக பரபரப்பு வாக்குமூலம்

நெல்லிக்குப்பம்: கடலூரில் தாய், மகன், பேரன் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டு வாலிபர், நண்பருடன் கைதானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தாய் தற்கொலைக்கு பழிதீர்த்ததாக கூறியுள்ளார். கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம், காராமணிக்குப்பம் சீதாராம் நகரில் வசித்தவர் கமலேஸ்வரி (60), இவரது இளைய மகன் சுகந்தகுமார் (43) ஐடி ஊழியரான இவர் 2 மனைவிகளை பிரிந்தவர். இதில் 2வது மனைவிக்கு பிறந்த இஷான் (10) என்ற மகன் பாட்டியுடன் தங்கி படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த கடந்த 15ம்தேதி வீட்டில் கமலேஸ்வரி, சுகந்தகுமார், இஷான் ஆகியோர் வெட்டி கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டு தோட்டத்தில் ரத்தம் சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது, சுகந்தகுமாரின் எதிர் வீட்டில் வசிக்கும் சங்கர் ஆனந்த் (21) என்பவர் சுகந்தகுமார் உட்பட 3 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சென்னை மறைமலை நகரில் மறைந்திருந்த சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் அமீது (20) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் சங்கர் ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: தாயாருடன் காராமணிகுப்பம் சீதாராம் நகரில் வசித்தேன். எனது அண்ணன் ஹரி சென்னையில் வேலை பார்த்து வருகிறான். சுகந்த குமாருக்கும் எனது தாயார் லட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக ஊரில் தகவல் பரவியது.

இதனால் கடந்த ஜனவரி மாதம் எனது அண்ணன் ஹரி கேட்டு திட்டினான். இதனால் மனமுடைந்த எனது தாயார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக நான் சுகந்தகுமார் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். அவரை எப்படியாவது பழி தீர்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். அவர் 15 நாட்கள் வீட்டிலும் 15 நாட்கள் பெங்களூருவிலும் வேலை செய்ததால் என்னால் அவரை உடனடியாக தீர்த்து கட்ட முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு சுகந்தகுமாரின் மகன் இஷான் எங்கள் தெரு வழியாக சென்றான்.

அப்போது அவனை நான் அழைத்து கேட்டபோது என்னை மரியாதை இல்லாமல் திட்டினான். இதனால் நான் அவனை அடித்தேன். இதுகுறித்து அறிந்த இஷானின் பாட்டி கமலேஸ்வரி என்னை கடுமையாக திட்டினார். மேலும் என்னை காரி துப்பினார். இதனால் எனக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது. இதன் பின்னர் நானும் எனது நண்பர்களும் மது குடித்தபோது சுகந்தகுமாரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன்.

அதன்படி கடந்த 13ம்தேதி இரவு சுகந்தகுமார் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினேன். சுகந்த குமார் வந்து கதவை திறந்தார். உடனே அவரை கத்தியால் வெட்டினேன். பதிலுக்கு அவர் கத்தியால் என் விரலை வெட்டினார். கமலேஸ்வரியும் வந்து தாக்கமுயன்றதால் இருவரையும் வெட்டி சாய்த்தேன். பின்னர் இஷானை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி, பின் கழுத்தை அறுத்து கொன்றேன். பிறகு வெளிக்கதவை பூட்டினேன். மறுநாள் பக்கத்துவீட்டு வழியாக தப்பித்து செல்ல முயன்றேன்.

அப்போது எனது விரல் துண்டிக்கப்பட்டதால் ரத்தம், அவர்களது வீட்டிலும் சிதறியது. துர்நாற்றம் வீசினால் மாட்டிக்கொள்வேன் என நினைத்து மீண்டும் மது அருந்திவிட்டு சாகுல் ஹமீது மூலம் பெட்ரோல் வாங்கி வர சொல்லி மீண்டும் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் அந்த வீட்டுக்குச் சென்று பெட்ரோல் மற்றும் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தேன். பின்னர் பீரோவில் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தேன். ஆனால் போலீசார் எங்கள் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

* புதரில்விரல் வீச்சு
சுகந்தகுமாரை கொலை செய்தபிறகு சங்கர் ஆனந்த் நீண்டநேரம் அவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மது பாட்டில்களை எடுத்து குடித்துள்ளார். சுகந்தகுமார் வெட்டியதில் சங்கர் ஆனந்தின் கட்டை விரல் பாதி அறுந்து தொங்கி உள்ளது. போதையில் இருந்ததால் அவருக்கு வலி தெரியவில்லை. வெளியே வந்தபிறகு தொங்கிக் கொண்டிருந்த கட்டை விரலை முழுவதுமாக வெட்டி ஒரு புதரில் வீசிவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

The post கடலூரில் தாய், மகன், பேரன் கொலையில் எதிர்வீட்டு வாலிபர், நண்பருடன் கைது: தாய் தற்கொலைக்கு பழிதீர்த்ததாக பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Nellikuppam ,Kamaleswari ,Karamanikuppam Seetharam ,Nagar ,
× RELATED கஞ்சா பொட்டலத்தை தொடர்ந்து கடலூர்...