×

புளியந்தோப்பு ஆடுதொட்டி வேலை தொடங்கி ஆம்ஸ்ட்ராங் கொலை வரை அஞ்சாமல் அடித்து ஆடிய அஞ்சலை: 3 கொலைகளுக்கு பின்புலமாக இருந்தாரா?

சென்னை: புளியந்தோப்பு ஆடுதொட்டி வேலை தொடங்கி ஆம்ஸ்ட்ராங் கொலை வரை அஞ்சாமல் அடித்து ஆடிய அஞ்சலை 3 கொலைகளுக்கு பின்புலமாக இருந்தாரா? யார் இந்த அஞ்சலை. இவரை பற்றி இப்போது பகீர் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நேரடியாக 11 பேர் ஈடுபட்டாலும் இதில் மறைமுகமாக பலர் ஈடுபட்டுள்ளது போலீசாரின் தினசரி விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிலும் பலர் பண உதவி செய்ததும் வாகனங்கள் கொடுத்து உதவியதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் பாஜ பிரமுகர் அஞ்சலை இந்த வழக்கில் சுமார் பத்து லட்ச ரூபாய் வரை கொலையாளிகளுக்கு நிதி உதவி அளித்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் அஞ்சலையை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் திருநின்றவூர் பாஜ நிர்வாகி செல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு பாஜ முக்கிய நிர்வாகி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பாஜ பிரமுகர் அஞ்சலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் அஞ்சலை பெயர் பேசப்பட்டு வந்தாலும் முக்கியமான இந்த வழக்கில் அவர் சம்பந்தப்பட்டுள்ளதால் அனைவரின் பார்வையும் யார் இந்த அஞ்சலை என்ற ரீதியில் அவர் பக்கம் திரும்பி உள்ளது. வட சென்னையில் பல்வேறு ரவுடி கும்பல்கள் இருந்தாலும் பெண் தாதாக்கள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அதிகபட்சம் மது பாட்டில்கள் விற்பது, கஞ்சா விற்பது போன்ற நடவடிக்கைகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ரவுடியிசத்தில் பெரிதாக பெண்களின் பங்கு கிடையாது.

ஆனால் அஞ்சலை தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் பரபரப்பாக பேசப்படுவதால் பிரபலம் அடைந்து விட்டார். யார் இந்த அஞ்சலை. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அஞ்சலை, சிறு வயதிலேயே புளியந்தோப்பு பகுதிக்கு வந்து டிக்காஸ்டர் ரோடு பகுதியில் வளர்ந்தார். ஆடுதொட்டி பகுதியில் உள்ள கழிவுகளை தூய்மை செய்யும் பணியில் இவரது குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். அதன் பிறகு இவருக்கு காதல் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு ஆடுதொட்டி பகுதியில் ஆடு மற்றும் மாடு வாங்கி விற்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் அஞ்சலை ஈடுபட தொடங்குகிறார். அதில் நல்ல வருமானம் வரவே தொடர்ந்து ஆடுதொட்டி பகுதியில் தனது வட்டி தொழிலை விரிவுபடுத்துகிறார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நல்ல முறையில் சென்று கொண்டிருந்த வேலையில் அஞ்சலைக்கு பல பெரிய ஆட்களின் சகவாசம் கிடைக்கிறது. அதன் பிறகு ஆடுதொட்டி மட்டுமின்றி புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் வட்டித் தொழிலை விரிவுபடுத்துகிறார்.

ஆடுதொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யார் வியாபாரம் செய்ய வந்தாலும் பணம் இல்லை என்றால் அஞ்சலையை சென்று பாருங்கள் அவர் தருவார் என கூறும் அளவிற்கு வட்டி தொழிலில் பிரபலம் அடைகிறார். அதன் பிறகு ராயப்பேட்டை பகுதியில் உள்ள சிவில் சப்ளை குடோனில் வட்டி தொழிலில் இறங்குகிறார். அஞ்சலையிடம் அங்கு உள்ள தொழிலாளர்கள் பலரும் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். அந்த இடத்தில் ஆற்காடு சுரேஷ் வேலை செய்கிறார்.

அப்போது அஞ்சலைக்கு ஆற்காடு சுரேஷுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இது அஞ்சலையின் கணவருக்கு தெரிய வருகிறது அவர் கண்டிக்கிறார் ஆனால் அஞ்சலை அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் தொடர்பில் இருந்து வருகிறார். இதனை அடுத்து அஞ்சலையின் முதல் கணவர் ஒதுங்கிக் கொள்கிறார். அப்போது, ராயப்பேட்டை சிவில் சப்ளை அரிசி கடத்தல் சம்பந்தமாக ஒரு கொலை நடைபெறுகிறது.

இதில் ஆற்காடு சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது சிறையில் அவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த சின்னா என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அப்போது ஆற்காடு சுரேஷை பார்ப்பதற்காக அஞ்சலை அடிக்கடி சிறைக்குச் செல்கிறார் அப்பொழுது சின்னாவும் உடன் இருப்பதால் அஞ்சலைக்கும் சின்னவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலையின் சொந்த ஊரை சேர்ந்தவர் தான் சின்னா. அதன் பிறகு ஆற்காடு சுரேஷ் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

வெளியே வந்த பிறகு புளியந்தோப்பு பகுதியில் தனியாக வீடு எடுத்து அஞ்சலையுடன் குடும்பம் நடத்துகிறார். அஞ்சலைக்கு ஏற்கனவே முதல் கணவருடன் வாழ்ந்த போது இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் குழந்ைத உள்ளது. ‌ஆற்காடு சுரேஷின் வருகைக்கு பிறகு அஞ்சலையின் வட்டி தொழில் பல மடங்கு வளர்கிறது. ஆற்காடு சுரேஷை வைத்து பல இடங்களில் பணம் கொடுத்து அஞ்சலை வசூல் செய்து வந்தார். இதனால் குறுகிய காலக்கட்டத்தில் அதிக பணத்தை அஞ்சலை சம்பதித்தார்.

அப்பொழுது ஆந்திராவில் பல இடங்களில் ஆற்காடு சுரேஷ் மூலமாக அஞ்சலை வட்டிக்கு பணம் கொடுத்து இருந்தார். அந்த பணத்தை கட்டாதவர்களை ஆற்காடு சுரேஷை வைத்து அடித்து மிரட்டி பணம் வசூல் செய்து வந்தார். இதில் சிலரின் பஞ்சாயத்து சின்னாவிடம் சென்றது. உடனே சின்னா ஆற்காடு சுரேஷை அழைத்து கண்டித்துள்ளார். நீ ரவுடி என்றால் ரவுடியுடன் தான் சண்டை போட வேண்டும் அப்பாவி பொதுமக்களை அடிக்கக் கூடாது என மிக கறாராக கூறியுள்ளார். மேலும், அஞ்சலை விவகாரத்திலும் தலையிட்டுள்ளார்.

அடுத்தவன் பொண்டாட்டியுடன் வாழ்கிறாய், இது தவறு என சின்னா அவ்வப்போது ஆற்காடு சுரேஷுக்கு அறிவுரை கூறி வந்துள்ளார். அதன் பிறகு புளியந்தோப்பு பகுதியில் சில அரசு ஒப்பந்தங்கள் வருகிறது. அதனை அஞ்சலை பண உதவி செய்ய அவரது ஆதரவாளர்கள் கான்ட்ராக்ட் எடுத்துள்ளனர். இந்த கான்ட்ராக்டில் சின்னாவின் ஆட்களும் தலையிட்டுள்ளனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் அவர்களை அடித்து அனுப்பி வைத்துள்ளார். அஞ்சலை கூறியதன்பேரில் அவர் அவ்வாறு செய்துள்ளார்.

இது சின்னாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மிகப்பெரிய பகையாக மாறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகவத்சிங் ஆகிய இருவரையும் ஆற்காடு சுரேஷ், வெட்டி படுகொலை செய்கிறார் அதன் பிறகு தான் ஆற்காடு சுரேஷ் மிகப் பெரிய ரவுடியாக அனைவராலும் பார்க்கப்பட்டார். புளியந்தோப்பு பகுதியில் சின்னாவின் நெருங்கிய கூட்டாளியான துரை என்பவரை ஆற்காடு சுரேஷ் கொலை செய்கிறார். இந்தக் கொலையிலும் அஞ்சலையின் தூண்டுதல் இருந்ததாக அப்போது பேசப்பட்டது.

ஒவ்வொரு முறை ஆற்காடு சுரேஷ் சிறைக்கு செல்லும் போதும் அஞ்சலை பணத்தை வாரி இறைத்து அவரை வெளியே அழைத்து வந்துள்ளார். மேலும் ஏரியாவில் பிரபலமாக தொடங்கியதும் அஞ்சலை கோயில்களுக்கு நன்கொடை வழங்குவது திருநங்கைகளுக்கு உதவி என தனது உதவிக்கரத்தை ஒரு பக்கம் நீட்டி தனது செல்வாக்கை அதிகப்படுத்தி உள்ளார். அஞ்சலையின் மகன் எழில், ஆற்காடு சுரேஷூடன் சேர்ந்து சில கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு சரித்திர பதிவேடு ரவுடியாக மாறினார்.

அதன் பிறகு தன்னை காத்துக்கொள்ள கட்சியில் சேர முடிவு செய்த அஞ்சலை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். முதலில் மகளிர் அணியில் சேர்ந்து கட்சிப் பணிகளை தொடங்கினார். அப்போது அதே பகுதியில் உள்ளவர்கள் மகளிர் அணியில் இவர் இருந்தால் நாங்கள் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறோம், என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட துணைத்தலைவி என்ற பொறுப்பு கொடுத்து மாவட்ட பொறுப்பிற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

முதலில் ஆற்காடு சுரேஷ் சின்னாவை கொலை செய்வதற்கு கான்ட்ராக்ட் பிரச்னை பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதற்கு பின்னணியில் அஞ்சலை இருந்துள்ளார். அதன் பிறகு சின்னாவின் நெருங்கிய கூட்டாளி துரை என்பவரை ஆற்காடு சுரேஷ் கொலை செய்துள்ளார். இதன் பின்னணியிலும் அஞ்சலை இறந்துள்ளார்.

அதன் பிறகு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட பின்பு சற்று அமைதியாக இருந்த அஞ்சலை தற்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பலுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் தலைமறைவாகியுள்ளார். இவ்வாறு ஆடுதொட்டி பகுதியில் வட்டி தொழிலை தொடங்கிய அஞ்சலையின் ஆட்டம் ஆம்ஸ்ட்ராங் கொலை வரை நீண்டு கொண்டே செல்கிறது.

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் நேரடி மேற்பார்வையில், இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 11 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது வாடிக்கையான பணிகளை மேற்கொள்வது இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை மட்டுமே கவனிக்கின்றனர். இணை கமிஷனர் விஜயகுமார், தினமும் 11 தனிப்படையினருக்கும் வேலைகளை கொடுத்து அதை கண்காணித்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இந்தக் கொலையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியான அஞ்சலைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அஞ்சலை, பாஜவில் வடசென்னை மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். அவர் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை மவுன்ட்டில் உள்ள இணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புளியந்தோப்பு ஆடுதொட்டி வேலை தொடங்கி ஆம்ஸ்ட்ராங் கொலை வரை அஞ்சாமல் அடித்து ஆடிய அஞ்சலை: 3 கொலைகளுக்கு பின்புலமாக இருந்தாரா? appeared first on Dinakaran.

Tags : Anjala ,Armstrong ,CHENNAI ,Anjali ,Bagheer ,Bahujan Samaj Party ,Tamil Nadu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...