×
Saravana Stores

மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று வழியில் மழைநீர் வடிகால்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

பெரம்பூர்: பெரம்பூர் செம்பியம், ஓட்டேரி, புரசைவாக்கம் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று வழியில் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு முதன்மை செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், திருவிக நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் தாவூத் பி, திருவிக நகர் மண்டல அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஓட்டேரி மற்றும் பெரம்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் இடங்களில் கால்வாய் அமைக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும், என ஒப்பந்ததாரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இந்த மழைநீர் கால்வாய்களை பருவமழைக்கு முன்பு முழுவதுமாக தூர்வாரும் பணிகளும் வெகு விரைவில் துவங்கப்பட உள்ளன.

சில இடங்களில் இது துவங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணி நடக்கின்ற இடங்களில் பொது மக்களுக்கு சிறு சிறு பிரச்னைகள் இருக்கக்கூடும். அதனை நாங்கள் விரைந்து சரி செய்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் நிறுத்தப்பட்ட சாலை போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை காலத்தை கருத்தில் கொண்டு அந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று வழியில் மழைநீர் வடிகால்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Perambur ,Sempiyam ,Otteri ,Purasaivakkam ,North-East Monsoon ,PK Shekharbabu ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம்...