×

இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: 2024-25ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில், நேற்று சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆடிமாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற 52 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, நான்கு வாகனங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆன்மிகப் பயணமாக சென்று இறையருள் பெற நினைக்கின்ற மூத்த குடிமக்களுக்கு உதவி புரிகிற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ல, அறுபடை வீடுகளுக்கு 5 கட்டங்களாக 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்ல முடிவெடுத்து இதுவரை மூன்று கட்டங்களில் 609 பேர் பயன்பெற்றுள்ளனர். 4வது கட்ட ஆன்மிகப் பயணம் ஆக.7ம் தேதி சுவாமிலையில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அரசு ரூ.1.58 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. மேலும், இந்தாண்டும் அறுபடை வீடுகளுக்கு 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின் 48 முதுநிலை கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு தரிசனம் கிடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாட்டில் 6 மண்டலங்களில் 250 மூத்த குடிமக்கள் பயன்பெறுகின்றனர். சென்னையில் மட்டும் 52 பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோயில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக அரசு ரூ.50 லட்சத்தை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரையில் 1,921 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிப்பதற்குண்டான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,072 கோடி மதிப்பிலான 6,574 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

 

The post இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,Chennai ,Adimata Amman Temples ,Kabaleeswarar Temple ,Mylapore ,Hindu Religious Endowments Legislative Assembly ,.Sekharbabu ,
× RELATED நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர்...