பெங்களூரு: ஜூன் 1ம் தேதி முதல் வழக்கமாக 365 மி.மீ. மழை பெய்யும், ஆனால், இன்று வரை 447 மி.மீ. மழை பெய்துள்ளது என அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறினார். கர்நாடக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது: ‘மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைநாடு, கடற்கரை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் வழக்கமாக 365 மி.மீ. மழை பெய்யும், ஆனால், இன்று வரை 447 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 22 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அதிக மழை பெய்வதால் அணைகளுக்கு வருகிற நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதே நேரம் நமது அணைகளில் நீர் இருப்பும் உயர்ந்துள்ளது.
இதே நாளில் கடந்த வருடம் நமது அணைகளில் 243 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு காணப்பட்டது. ஆனால், தற்போது அணைகளில் மொத்தம் 536 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் நீர் வரத்து, அணை நீர்மட்டம், வெளியேற்றம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் அடிப்படையில் 2225 கிராமங்களில் வசிக்கும் 2.38 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். 2132 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 29 இடங்களில் உணவு கூடங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்கு நிதி பற்றாக்குறை கிடையாது.
மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ. 777.54 கோடி நிதி இருக்கிறது. வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் போதே கூடுதல் நிதிகள் வழங்கப்படும். மழை பெய்யும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படைகள் முகாமிட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது செய்த தவறுதான் காரணமாகும். நெடுஞ்சாலை ஓரங்கள் 90 டிகிரி கோணத்தில் இருந்துள்ளது. எனவே, மழை பெய்த போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை சேதம், பேரவை தொடர் முடிந்த உடனே மலைநாடு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றார்.
The post ஜூன் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் 447 மிமீ மழை பெய்துள்ளது: அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தகவல் appeared first on Dinakaran.