×

தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில் வைத்துள்ள பூவோடு மக்களை சந்தியுங்கள்: சபாநாயகர் யுடி காதர் ஆவேசம்

பெங்களூரு: மாநில அரசு ஊழல் மற்றும் வால்மீகி நலவாரியத்தில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில் பூக்களை வைத்துக்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வைத்திருக்கும் பூக்களோடு தொகுதி மக்களை சந்தியுங்கள் என பாஜ உறுப்பினர்களுக்கு சபாநாயகர் யுடி காதர் அறிவுரை கூறினார். கர்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 15ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து வால்மீகி நலவாரியத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரினார். சபாநாயகர் யுடி காதர், விதி 69ன் கீழ் விவாதிக்க அனுமதி அளித்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் சுமார் 3 மணி நேரம் விவாதித்தார். பாஜ உறுப்பினர்கள், ஆளுங்கட்சி தரப்பு உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்றனர். முதல்வர் சித்தராமையா, விவாதத்திற்கு நேற்றுமுன்தினம் பதில் அளித்தாலும் எதிர்க்கட்சிகள் அதை கேட்கவில்லை. எங்களுக்கு பதில் தேவையில்லை முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் அவை முடங்கியது.

இந்நிலையில் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடினாலும் அவையில் கூச்சல் குழப்பத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 12 மணி அளவில் மீண்டும் அவை தொடங்கியதும் இதை ஏதிர்பார்த்து காத்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத், சுனில்குமார், சுரேஷ்குமார், அரக ஞானேந்திரா, ரகு , உதய் பி கருடாச்சார், ராமமூர்த்தி மற்றும் மஜத உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதல்வர் சித்தராமையா பதில் அளிக்க தொடங்கியதும், பாஜவினர் தங்கள் காதுகளில் பூக்களை வைத்துக்கொண்டு, மாநில அரசின் ஊழல், வால்மீகி நலவாரியத்தில் நடந்த ரூ.187 கோடிமுறைகேடுகளை மறைக்கும் வகையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாஜி அமைச்சர் நாகேந்திராவை பாதுகாக்கும் முயற்சி நடந்துள்ளன என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து சபாநாயகர் யுடி காதர் கூறியதாவது: ‘மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு நிவாரணம் கேட்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை. பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் முக்கிய அலுவல் பாதிக்கப்படுகிறது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல் அவையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காதுகளில் அணிந்துள்ளனர். காதில் வைத்திருக்கும் இந்த பூக்களை கீழே போட்டுவிடாதீர்கள். காதில் பூக்களோடு தொகுதி மக்களை சந்தியுங்கள்’ என்றார். சபாநாயகர் யுடி காதர் இவ்விதம் கூறியதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

The post தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில் வைத்துள்ள பூவோடு மக்களை சந்தியுங்கள்: சபாநாயகர் யுடி காதர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP ,dharna ,Speaker ,UD Khader ,BENGALURU ,Valmiki Welfare Board ,
× RELATED ஓய்வூதியர் தர்ணா போராட்டம்