பெங்களூரு: கடந்த 2012ம் ஆண்டு ஒரு இளம்பெண், தனது செல்போன் சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய, அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு வேலை செய்த வாலிபரை சந்தித்தார். தொடர்ந்து அவர், அந்த கடைக்கு சென்றதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. அவர்கள், 6 அண்டுகளாக காதலித்து வந்தனர். இதையொட்டி இருவரின் சம்மதத்துடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் அந்த வாலிபர், இளம்பெண்ணுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டார்.
இதுதொடர்பாக இளம்பெண், 2018 ஜூலை 3ம் தேதி, வாலிபர் மீது புகார் அளித்தார். அதில், நாங்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவர் என்னுடன் உடலுறவு கொண்டுள்ளார். ஆனால், 2018 ஏப்ரல் முதல் என்னை புறக்கணிக்க தொடங்கினார். எனவே, வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், மோசடி, பலாத்காரம், பொய்யான திருமண வாக்குறுதி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், வாலிபர் தரப்பில், தாக்கல் செய்த குற்றவியல் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான தனி நபர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தெரிவித்தார். அதில் மோசடி, பலாத்காரம், பொய்யான திருமண வாக்குறுதி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மனுதாரர் மீது தொடரப்பட்ட புகார் ரத்து செய்யப்படுகிறது. வாலிபர் மீது புகார் அளித்த இளம்பெண், தனது காதலின் உச்சத்தில் ஆறு ஆண்டுகளாக இளமை மகிழ்ச்சியை அனுபவித்துள்ளார். ஒரு நல்ல நேரத்தில் ஒருமித்த உடல் உறவை, காதல் குறைந்துவிட்டதால் அதை கற்பழிப்பு என்று கருத முடியாது என கூறி, வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
The post ஒருமித்த உடலுறவு பலாத்காரமே அல்ல: வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.