×

சென்னை சர்வதேச விமான முனையத்தில் பயணிகள் காத்திருப்பை தடுக்க புதிய திட்டம்: ஆகஸ்ட் முதல் அமல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் குடியுரிமை சோதனைக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்க, அடுத்த (ஆகஸ்ட்) மாதம் முதல் இமிக்ரேஷன் டிரஸ்டட் டிராவலர் புரோகிராம் எனும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் குடியுரிமை சோதனை பிரிவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அங்கு நீண்ட வரிசையில் பலமணி நேரம் பயணிகள் காத்திருப்பதோடு, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதிலளித்து, சோதனை முடிந்து, பாஸ்போர்ட்டில் குடியுரிமை அலுவலக முத்திரை குத்தி, நமது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தரும் வரையில் என்ன ஆகுமோ, என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் பயணிகள் நிற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் சென்னையில் இருந்து நள்ளிரவு நேரங்களில் அதிகளவு வெளிநாட்டு விமானங்கள் புறப்பட்டு செல்வதாலும், அதேபோல் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு விமானங்கள் ஒரே நேரத்தில் சென்னை வருவதாலும், இங்குள்ள குடியுரிமை கவுன்டரில் ஏராளமான பயணிகள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகிறது. அதே நேரம் குடியுரிமை சோதனை மிக முக்கியமானது என்பதாலும், இது நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதாலும் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. இப்பிரிவு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னையில் இருந்து பயணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் டிரஸ்டட் டிராவலர் புரோகிராம்’ எனும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள் மற்றும் பூர்வீக இந்தியர்களாக இருந்து, தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே பலனடைய முடியும். இத்திட்டத்தில் பலனடைய விரும்புபவர்கள், தங்களின் பயணத்துக்கு முன்பே அதற்காக தனியே உருவாக்கப்பட்ட இணையதள முகவரியில் பதிவு செய்து இணைய வேண்டும். அதோடு பெரியவர்கள் ₹2 ஆயிரம், குழந்தைகள் ₹1000, வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இக்கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை கட்டணம் செலுத்தினால், அவர்களின் பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதிவரை செல்லுபடியாகும். இதில், தங்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கண் கருவிழிகள் போன்றவற்றையும் இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பயணம் செய்யும் தேதியில் சென்னை வரும்போது, குடியுரிமை சோதனையில் அவர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. அவர்களுக்கு தனியே கவுன்டர்கள் இருக்கும்.

அங்கு பொருத்தப்பட்ட நவீன கருவிகள் மூலம் தங்களின் அங்க அடையாளங்களை பதிவு செய்து, அதிகாரிகளின் நீண்டநேர கேள்விகள் இன்றி, குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டு, குறைந்த நேரத்தில் தங்களின் சோதனை முடிந்து, தங்களின் உடைமைகளுடன் வெளியே செல்வதற்காக, கன்வெயர் பெல்ட் பகுதிக்கு சென்றுவிடலாம். இந்த அதிநவீன முறை கடந்த மாதம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை சர்வதேச விமான முனையத்தில் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சர்வதேச வருகை குடியுரிமை பகுதியில் 2, புறப்பாடு பகுதியில் 2 சிறப்பு கவுன்டர்கள் தனியாக அமைக்கப்படுகின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனினும், இத்திட்டத்தில் இந்தியர்கள், பூர்வீக இந்திய குடிமக்கள் மட்டுமே பலனடைய முடியும். வெளிநாட்டு பயணிகள் அனைவரும் வழக்கமான குடியுரிமை சோதனைக்கு உட்படுத்திதான் ஆகவேண்டும் என்றும் விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

The post சென்னை சர்வதேச விமான முனையத்தில் பயணிகள் காத்திருப்பை தடுக்க புதிய திட்டம்: ஆகஸ்ட் முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : Chennai International Airport ,Chennai Airport ,Chennai International Airport Terminal ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே...