×

மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது: ரயில் விபத்து தொடர்பாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் அலட்சிய போக்கினால் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலமான திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லை. இப்போது பயணிகள் ரயில் விட்டிருக்கிறார்கள். அது எப்போது போய்ச் சேரும் என்று தெரியாது. தமிழகத்தை வஞ்சிக்கிற நோக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலும், நிதி ஒதுக்காமலும் வெளிநாடுகளில் கடன் பெற முடியாமல் முட்டுக்கட்டைகளை மோடி அரசு போட்டு வருகிறது.

கடந்த பாஜக ஆட்சியில் ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைப் போல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது. ரயில் விபத்துகளை முற்றிலும் தடுத்து ரயில் பெட்டிகளில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை பெருக்கி பொது மக்கள் பயணிக்கிற வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றுச் சொன்னால் மக்களின் கோபத்திற்கு மோடி அரசு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது: ரயில் விபத்து தொடர்பாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi Regime ,CHENNAI ,Modi government ,Selvaperunthagai ,BJP ,
× RELATED ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் மோடி அரசின் யு டர்ன்: காங். விமர்சனம்