×

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. 2022 ஆகஸ்ட் 15ல் அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் கடந்த ஜன.8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மகாராஷ்டிர அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்.

பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது.” என்று கூறப்பட்டது. அதன்படி, அந்த 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இந்த 11 பேரில் இருவரான ராதே ஷியாம் பகவான்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகியோர் விடுதலை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மறுஆய்வு மனு மீது தீர்ப்பு வரும்வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என ராதே ஷியாம் பகவான்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகிய இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது என்ன மனு?. இது முற்றிலும் தவறானது. ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்துள்ளீர்கள்?. உங்களின் அடிப்படை உரிமை எங்கு பாதிக்கப்பட்டுள்ளது? இந்த மனுவை அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்ய உகந்தது தானா?. உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் மேல்முறையீட்டில் நாங்கள் எப்படி விசாரிப்பது.” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். வழக்கு பின்னணி: கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஜன.8-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது.

The post பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Bilgis Banu ,NEW DELHI ,Bilgis Bhanu ,Gujarat government ,Bilgis ,Dinakaran ,
× RELATED பில்கிஸ் பானு வழக்கு குஜராத் அரசு மீது...