×

இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிப்பதற்குண்டான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 2024-2025 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இன்று சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற 52 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, நான்கு வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆன்மிகப் பயணமாக சென்று இறையருள் பெற நினைக்கின்ற மூத்த குடிமக்களுக்கு உதவி புரிகின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே மானசரோவர் புனிதப் பயணம் செல்வதற்கு வழங்கப்பட்ட அரசு மானியம் ரூ. 40,000த்தை ரூ.50,000 ஆகவும், முக்திநாத் செல்வதற்கு அரசு மானியம் ரூ.10,000த்தை ரூ.20,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக இரண்டாண்டுகளில் ரூ.1.25 கோடி அரசு மானியத்தில் 500 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல் அறுபடை வீடுகளுக்கு 5 கட்டங்களாக 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்ல முடிவெடுத்து இதுவரை மூன்று கட்டங்களில் 609 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். நான்காவது கட்ட ஆன்மிகப் பயணம் ஆக. 7 ம் தேதி சுவாமிலையில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அரசு ரூ.1.58 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. மேலும், இந்தாண்டும் அறுபடை வீடுகளுக்கு 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றபின் 48 முதுநிலைத் கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு தரிசனம் கிடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாட்டில் 6 மண்டலங்களில் 250 மூத்த குடிமக்கள் பயன்பெறுகின்றனர். சென்னையில் மட்டும் 52 நபர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த திருக்கோயில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இதற்காக அரசு ரூ.50 லட்சத்தை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரையில் 1,921 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிப்பதற்குண்டான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,072 கோடி மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட 6,574 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் ஆன்மிகப் பயணம் செல்கின்ற அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இறையருள் கிடைக்க இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது பழனியில் ஆக. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அறுபடை வீடுகளின் காட்சியரங்கம், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவை அமைக்கப்படுவதோடு, சிறப்பு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர்கள் வெளியிடப்படுகின்றன. முருகப் பெருமானின் சிறப்பு பாடல் ஒன்று 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டின் இரண்டு நாட்களும் கலந்துக் கொள்கின்ற சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், சான்றோர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிகம் சார்ந்த மாநாட்டில் இந்த மாநாடு தான் மிகப்பெரிய மாநாடாக இருக்கும், அந்த வரலாற்றையும் படைக்கப் போகின்றவர் முதல்வர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியானது சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சியாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு யார் செய்திருந்தாலும் எப்பேர்பட்ட உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. தவறு செய்தவர்கள் மீது இன்னார் இனியவர் என்று பார்க்காமல் கடுமையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகின்றார். இதை அனைத்து ஊடகங்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், ரேணுகாதேவி, முல்லை, கவெனிதா, கோயில் அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Shekhar Babu ,Hindu Religious Endowment Department Legislative Assembly ,Kabaleeswarar Temple ,Mylapore, Chennai ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு