×

குழந்தைகளை கொல்லும் சண்டிப்புரா வைரஸ் : தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

அகமதாபாத்: வட மாநிலங்களில் சண்டிப்புரா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் சபர்கந்தா மாவட்டத்தில் இந்த மாதம் பரவத் தொடங்கிய சண்டிப்பூரா வைரஸுக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் குழந்தைகளே பெருமளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மணல் ஈக்கள், சில சமயங்களில் உண்ணி,மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு அறிகுறியுடன் இறுதியாக கோமா வரை சென்று உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதீத காய்ச்சலால் 72 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. இந்த நோய்க்கு பிரத்யேக சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்பதால் நோய் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் துணை மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்டறிந்து, அதுபற்றி அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பவும் நோய் குறித்து பொது மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல பொது மக்களும் தங்களை பூச்சி கடியில் இருந்து பாதுகாக்கும் விதமான ஆடைகளை அணிவதுதோடு, காலணி இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி சுமார் 45 மீட்டர் சுற்றளவில் புல், பூண்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் வீட்டை சுற்றி பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post குழந்தைகளை கொல்லும் சண்டிப்புரா வைரஸ் : தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Department of Public Health and Epidemiology ,Tamil Nadu ,Gujarat ,Sabarkantha district ,
× RELATED அகமதாபாத் – சென்னை இண்டிகோ விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு!!