×

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் கட்டண உயர்வால் வெறுத்து போன மக்கள்.. BSNL-ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!!

டெல்லி: தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்திய கட்டண உயர்வை அறிவித்தன. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் பிறகு அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் 90-95 சதவீத டெலிகாம் வாடிக்கையாளர்களை தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை வைத்துக்கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தியது.

இந்த 3 டெலிகாம் நிறுவனங்களும் தங்களுடைய லாப அளவீடுகளை அதிகரிக்க முடிவு செய்து, ஜூலை மாத துவக்கத்தில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது யாராலும் மற்ற முடியாது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை தங்கள் டெலிகாம் சேவை கட்டணத்தை 10 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தியது மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.47,500 கோடி வரை வருமானத்தைப் பெற முடியும். ஆனால் இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்த கட்டண உயர்வை சமாளிக்க முடியாத சாமானிய நடுத்தர மக்கள், BSNL-ன் மலிவான கட்டண திட்டத்தைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி, தங்களது மொபைல் நெட்வொர்க்கை MNP சேவை மூலம் மாற்றி வருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்பு அதாவது ஜூலை 3-4ம் தேதிக்கு பின்பு சுமார் 2.75 மில்லியன் வாடிக்கையாளர்கள் BSNL நெட்வொர்க்கிற்கு மாறியுள்ளனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை ஒப்பிடுகையில் குறைவான கட்டணத்தில் சேவை அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வருமானத்தில் கீழ் தட்டு மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் தற்போது டாடா குழுமத்துடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவையை கொண்டு வர துவங்கியுள்ளது. இந்த 4ஜி சேவையும் மலிவான விலையில் இருக்கும் காரணத்தால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பிற நெட்வொர்க்கில் இருந்து மாறி வருகின்றனர்.

 

 

The post ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் கட்டண உயர்வால் வெறுத்து போன மக்கள்.. BSNL-ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Jio ,Airtel ,Vodafone ,Delhi ,Reliance ,Bharti Airtel ,Vodafone Idea ,Dinakaran ,
× RELATED செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்றவர் கைது