*பொதுமக்கள் அச்சம்
பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், பள்ளிகொண்டாவை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்கள் பள்ளி, கல்லூரி உட்பட பல்வேறு பணி நிமித்தமாக பள்ளிகொண்டா வந்துதான் இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். அதனால், சாலை சந்திப்புகளில் மக்கள் கூட்டத்துடன் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் பள்ளிகொண்டா நகர் பகுதியில் நாளுக்குநாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன.
இதனால், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களை பின்தொடர்ந்து துரத்தி கடிப்பது, நடந்து செல்பவர்களை கடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தெருவுக்கு 20 நாய்கள் வீதம் ஒரு வார்டில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் 24 மணி நேரமும் சுற்றிதிரிந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் வெறி நாய்கள் துரத்தி கடித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பேரூராட்சி நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தியும் அதனை கட்டுப்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தெருநாய்கள் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினர்.
முட்டுக்கட்டையாக இருக்கும் விலங்குகள் நல வாரியத்தினர்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் நாளுக்கு நாள் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் பலமுறை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதனை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றது. அதற்கு, முட்டுக்கட்டையாக விலங்குகள் மற்றும் பறவைகள் நலவாரியம் தலையிட்டு நாய்களை பிடித்து அடைக்க கூடாது எனவும், கருத்தடை செய்யக்கூடாது எனவும் போர்க்கொடி தூக்கி வருவதால் பேரூராட்சி நிர்வாகம் மூலம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு பாஸ் வழங்கி, தெருநாய்களை கருத்தடை செய்தும், வெறிநாய்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாதம் 100 நாய்க்கடி ஊசி
பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பள்ளிகொண்டா மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில், நாய்கடி ஊசிக்காக மட்டுமே நாள்தோறும் 5 பேர் வீதம் என மாதம் 100க்கும் மேற்பட்டோர்வந்து செல்கின்றனர். அதன்படி, கடந்த 6 மாதத்தில் நாய்கடி ஊசி போட்டுகொள்பவர்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாக காணப்படுவதாக மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.
The post பள்ளிகொண்டா பேரூராட்சியில் நாளுக்கு நாள் அதிகரிப்பு தெருக்களில் கூட்டம் கூட்டமாக உலா வரும் வெறிநாய்கள் appeared first on Dinakaran.