×

முகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி தர்காவில் பூக்குழி திருவிழா

* அக்னி குண்டத்தில் இஸ்லாமியர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

* மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அனைத்துமதத்தினர் பங்கேற்பு

புளியங்குடி : முகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி அசேன் ஹுசைன் தர்காவில் பூக்குழி திருவிழா நடந்தது. இதையொட்டி நோன்பிருந்த இஸ்லாமியர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்கள் செலுத்திய நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் விழாவில் பங்கேற்றனர். முகரம் பிறை பத்தாவது நாள் முகமது நபியின் பேரன் அசன் உசேன் கர்பலா போரில் கொல்லப்பட்டதின் நினைவாக புளியங்குடியில் உள்ள அசன் ஹுசேன் தர்காவில் முகரம் மாதத்தின் பத்தாவது நாள் கந்தூரி விழா நடந்தது. மாலை நேரத்தில் தர்காவில் இருந்த புறப்பட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இரவு 10 மணியளவில் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அசன் உசேன் நினைவாக தர்காவில் வளாகத்துக்குள் பூக்குழி இறங்கினர். இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் விறகு, உப்பு ஆகியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தினர். பூ இறங்கிய பின்னர் தீ கங்குகளை அகற்றி பின்னர் அந்த இடத்தில ஒரு பானைக்குள் பானைகாரம், அரிசி ரொட்டிகளையும் வைத்து புதைத்து விடுகின்றனர். இதனை அடுத்த ஆண்டு எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனை ஏராளமான இந்துக்களும் வாங்கி செல்கின்றனர். விழாவை பால்ராவுத்தர் வகையறா ஐந்து தலைமுறையாக நடத்தி வருகின்றனர்.

தற்போது நாகூர்மைதீன், தீவான்மைதீன், உசேன் ராவுத்தர், அசன்மதுசூதனன், காதர்மைதீன், மைதீன்பிச்சை மற்றும் செட்டியார் வகையறாக்கள் ஆகியோர் நடத்தி வருகின்றனர். விழாவையொட்டி நடந்த குதிரை ஊர்வலம், கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலத்தை காண புளியங்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

புளியங்குடியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்முகரம் பண்டிகையில் புளியங்குடியில் மட்டும் தான் முஸ்லிம்கள் நெருப்பை வளர்த்து நெருப்பில் இறங்கி அசன் உசேன் பெயரில் நோன்பிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர். இந்த விழா இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், கடையநல்லூர் தீயணைப்பு அலுவலர் சேக் அப்துல்லா ஆகியோர் தலைமையில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

The post முகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி தர்காவில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pookkuzhi festival ,Buliangudi ,Mukaram ,Muslims ,Agni ,Gundam ,Puliangudi ,Pookuzhi festival ,Puliangudi Asen Hussain Targah ,Kund ,Mukaram festival ,
× RELATED எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு...