×

நீலகிரி, கோவை, திருப்பூரில் காற்றுடன் மழை தொடர்கிறது மண்சரிவால் சாய்ந்த மரங்கள், சாலையில் விரிசல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன்மழை தொடர்கிறது. நேற்றும் மரங்கள் ரோட்டில் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் வீடுகள் இடிந்தன. சாலையில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி மற்றும் இத்தலார், எமரால்டு பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

ஊட்டி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் காற்றுடன் மழை தொடர்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்ததால், கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. காற்றும் அடிப்பதால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று ஊட்டியில் இருந்து முத்தோரை பாலாடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை பகுதியில் 2 ராட்சத மரங்கள் விழுந்தன. அப்போது அவ்வழியாக சென்று கார் ஒன்று இரு மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மரங்களை அகற்றினர். இதனால் இவ்வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து தமிழகம் மாளிகை வழியாக பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையில் ஏற்கனவே 3 மரங்கள் விழுந்த நிலையில் நேற்றும் ஒரு ராட்சத மரம் விழுந்தது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்ததால், மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. பந்தலூர் கூவமூலா பகுதியில் மரம் விழுந்து மின்மாற்றி சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அஊட்டியில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்களுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன.

கூடலூரில் இருந்து நாடுகாணி, கீழ்நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கீழ்நாடுகாணியை அடுத்துள்ள பகுதியில் சாலையில் ஒரு பகுதியில் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டு உள்ளது. விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்படுத்தி வாகனங்கள் மறுபக்கமாக செல்லும் வகையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. விரிசல் அதிகரித்தால் 3 மாநில போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ேகாவை, திருப்பூர் மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது.

* மலை ரயில் பாதிப்பு
நீலகிரியில் பெய்த மழை காரணமாக நேற்று ஊட்டியில் இருந்து கேத்தி செல்லும் ரயில் பாதையில், கேத்தி அருகே மரம் விழுந்தது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

* மழை அளவு
நீலகிரியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: அவலாஞ்சி 204, எமரால்டு 123, அப்பர்பவானி 106, பந்தலூர் 84, கூடலூர் 72, தேவாலா 68.

The post நீலகிரி, கோவை, திருப்பூரில் காற்றுடன் மழை தொடர்கிறது மண்சரிவால் சாய்ந்த மரங்கள், சாலையில் விரிசல்: போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Coimbatore ,Tirupur ,Nilgiri district ,Nilgiris district ,Tamil Nadu-Kerala ,Dinakaran ,
× RELATED ரோந்து செல்லும் போது துப்பாக்கி...