×

தமிழகத்தில் நடப்பாண்டு ஜூன் வரை பாம்பு கடியால் 7,300 பேர் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு மற்றும் சுருட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மனிதர்களை கொல்லக் கூடிய விஷத்தன்மை உடையவையாகும். மீதமுள்ள வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசும் சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்டவை விஷத்தன்மை அற்ற பாம்புகள்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது அது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 19,795 பேர் பாம்பு கடியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அதில் 43 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 630 பேர், கிருஷ்ணகிரியில் 541 பேர், வேலூரில் 358 பேரும் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 மட்டுமே விஷத்தன்மை உடையவை. பாம்பு கடித்தால் உடனடியாக கடிபட்ட பகுதியை சுத்தம் செய்து முதலுதவி செய்ய வேண்டும். பிறகு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பாம்பு கடி மருந்து தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் நடப்பாண்டு ஜூன் வரை பாம்பு கடியால் 7,300 பேர் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health Department ,Chennai ,Dinakaran ,
× RELATED அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை...