×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடி கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடி கட்சியில் இருந்து நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மலர்கொடியை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கறிஞர் மலர்கொடி பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியாவார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள் என்பவரோடு மலர்கொடி தொடர்பில் இருந்துள்ளார்.

அருள் வங்கி பண பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் மலர்கொடிக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளதும், நாட்டு வெடிகுண்டு மலர்கொடி மூலமாக அருளுக்கு சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் – திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி சேகர் (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று (நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

* தமாகா நிர்வாகி நீக்கம் ஜி.கே.வாசன் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர், அதிமுக நிர்வாகி மலர்கொடிக்கும், அருளுக்கும் உதவி செய்ததாக தெரியவந்துள்ளது. இதனை கண்டறிந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர். இந்நிலையில், அவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மாணவரணி துணைத்தலைவர் ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.’’ என கூறியுள்ளார்.

* பாஜவில் இருந்து அஞ்சலை நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் காதலியும், பாஜ மகளிர் அணியின் வடசென்னை மேற்கு மாவட்ட துணை தலைவருமான அஞ்சலைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, போலீசார் அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இதனால், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். அவர் மீது கந்து வட்டி உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே அவர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடி கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Armstrong ,Malarkodi ,Edappadi ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...