×

மாஜி அமைச்சர் வைகைச்செல்வனுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, விருதுநகரில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மீது வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகைச்செல்வன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளாக வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், வழக்கின் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, வைகைச்செல்வனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post மாஜி அமைச்சர் வைகைச்செல்வனுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : minister ,Vaikaichelvan ,Chennai ,Madras High Court ,Vaikachelvan ,2021 assembly elections ,AIADMK ,Virudhunagar ,
× RELATED செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப...