×

வரலாற்றில் வாழும் …. பொன்னியின் செல்வன்: நெல்லை சங்கீத சபாவில் இன்று நடக்கிறது!

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற, தமிழ் வரலாற்று நாவல், ‘பொன்னியின் செல்வன்’, கி.பி. 1000ம் ஆண்டில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்நாவல் 1950 முதல் 1955ம் ஆண்டு வரை ‘கல்கி’ வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து, பல லட்சம் வாசகர்களை கவர்ந்த படைப்பு. இந்நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதற்கு நாவலில் விரியும் பிரமாண்டமான காட்சிகள், படிமங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்களை, திரைப்படத்தில் தத்ரூபமாக கொண்டு வர முடியுமா என்ற அச்சமே காரணம். ஆனால், சென்னையை சேர்ந்த, ‘டி.வி.கே. கல்ச்சுரல் அகாடமி’ இதை தைரியத்துடன் மேடை நாடகமாக தயாரித்து, அரங்கேற்றி இருக்கிறது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் தமிழ் ரசிகர்களை, நான்கு மணி நேரம் அரங்கில் அமர வைத்து ஒரு வரலாற்று நாடகத்தை நடத்தி காட்டி கைத்தட்டல்களை பெற்று அசத்தியுள்ளனர் பொன்னியின் செல்வன் நாடகக் குழுவினர். கல்கியின் முக்கிய பாத்திரப் படைப்புகளான சுந்தரசோழன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர், நந்தினி, ஆழ்வார் கடியான், குந்தவை, வானதி, மந்திரவாதி, அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், ஜோசியர், சின்னப்பழு வேட்டரையர், பெரிய பிராட்டியார், பூங்குழலி, சேந்தன் அமுதன், மந்தாகினி போன்ற முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள், பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நடிக்கின்றனர்.நாடகத்தின் அரங்க அமைப்பு காட்சி ஜோடனைக், ஒலி, ஒளி அமைப்பு, தந்திரக் காட்சிகள், தலைவெட்டப்படும் காட்சி, கட்டடம் இடித்து விழும் காட்சி மற்றும் கப்பல் எரியும் காட்சி போன்றவை பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. கதாபாத்திரங்களுக்கான ஒப்பனை, அந்த காலத்து மனிதர்களை தோற்றத்தை கண்முன் நிறுத்துகிறது. நாவலின் மூலக்கதை சிதையாமல், இயல்பான கதை வசனங்களுடன் நாடகத்துக்கான காட்சிகளை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் மல்லிக்ராஜ். வரலாற்றில் வாழும் பொன்னியின் செல்வனை நாடகமாக தயாரித்து இருக்கும் டி.கே.ரமேஷ்க்கு பாராட்டுக்கள். சென்னை, கோவை, சேலம் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் இந்நாடகம் பல காட்சிகள் நடத்தப்பட்டு, பல ஆயிரம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நாடகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை சங்கீத சபாவில் மதியம் 2 மணி மற்றும் மாலை 6 மணி என 2 காட்சிகளாக நடக்கின்றது. நுழைவுக் கட்டணச் சீட்டு அரங்கில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு: 94444 14845, www.bookmyshow.com. குடும்பத்துடன் சென்றால், பிரமாண்டமான ஒரு வரலாற்று நாடகத்தை பார்த்த ரசித்த அனுபவத்தை பெறலாம்….

The post வரலாற்றில் வாழும் …. பொன்னியின் செல்வன்: நெல்லை சங்கீத சபாவில் இன்று நடக்கிறது! appeared first on Dinakaran.

Tags : Kalki ,Chola Empire ,
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்