- நபார்டு வங்கி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- பெரியகருப்பன்
- சென்னை
- 43வது நிறுவன தினம்
- தேசிய
- விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான வங்கி
- நபார்ட்
- ஹோட்டல் அம்பாசிடர் பல்லவா
- எழும்பூர்
- கே.ஆர்.பெரியகருப்பன்
சென்னை: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 43வது நிறுவன தின கொண்டாட்டம் எழும்பூர் ஓட்டல் அம்பாசிட்டர் பல்லவாவில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது: 1982ம் ஆண்டில் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வெற்றிநடை போட்டு வருகிறது நபார்டு வங்கி. கூட்டுறவு அமைப்பு முறை மற்றும் கிராமப்புற வங்கி முறையை வலுப்படுத்தியதில் நபார்டு வங்கியின் பங்கு மிக முக்கியமானது. 4,454 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.195 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
மாநில மற்றும் ஒன்றிய அரசின் உதவிக்கு மேல், நபார்டு வங்கியின் மானியம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிராமப்புற சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், பள்ளி, கல்லூரிகள், பழங்குடியின மக்களுக்கான விடுதிகள், கால்நடை மருத்துவமனைகள் போன்றவற்றில் திட்டங்களை நடைமுறைப்படுத்த நபார்டு வங்கி இதுவரை சுமார் ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் சாதகமான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், சென்னையின் நெரிசலை குறைப்பது தொலைநோக்கு பார்வையின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.
இதற்கான பங்களிப்பை மேற்கொள்ளவுள்ள வாய்ப்புகளை ஆராயுமாறு நபார்டு வங்கியை கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்திற்கும், இந்தியாவிற்கும் சாத்தியமான மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிய நபார்டு வங்கி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ஆர்பிஐ மண்டல இயக்குநர் உமாசங்கர், நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஜோதிநிவாஸ் உள்பட நபார்டு வங்கி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழகத்தில் சாலைகள், பாலங்கள், விடுதிகள் கட்ட நபார்டு வங்கி ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.