×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அரசு அனுமதி.! 140 துணை பணியாளர்களும் செல்கின்றனர்

டெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம்தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கி்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர்.

கடந்த முறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 121 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்த முறை எண்ணிக்கையில் 4 குறைந்துள்ளது. 117 வீரர்கள், 140 துணை பணியாளர்கள் பட்டியலுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதலில் 21, டேபிள் டென்னிஸ் 8, பேட்மிண்டன் 7, வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் தலா 6பேர் களம் காண்கின்றனர். கடந்த முறை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் கைப்பற்றியது.

இதுதான் ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு எடிசனில் இந்தியா பெற்ற அதிக பதக்கமாகும். ஆனால் இந்தமுறை அதைவிட அதிக பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.பாரீஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 16 போட்டிகளில் 117 பேர் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களின் பயிற்சிக்காக இந்திய அரசு ரூ.470 கோடி வழங்கி உள்ளது. தடகளத்திற்கு அதிகபட்சமாக ரூ.96 கோடி, பேட்மிண்டன் ரூ.72 கோடி, வில்வித்தை ரூ.39 கோடி, மல்யுத்தம் ரூ.37 கோடி வழங்கப்படுகிறது. நீரஜ் சோப்ரா, பிவி சிந்து போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்பதால் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவு பெரிதாக உள்ளது.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அரசு அனுமதி.! 140 துணை பணியாளர்களும் செல்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Delhi ,Olympics ,33rd Olympic Games ,French ,Paris ,Paris Olympic Games ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா…ஆடல், பாடல் என அசத்திய கலைஞர்கள்