×
Saravana Stores

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவ, மாணவிகள் கடிதம்

நாகப்பட்டினம்: ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி தொடங்கி வைத்த முதல்வருக்கு நாகப்பட்டினம் ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முன்மாதிரியாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். முதல்கட்டமாக ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரே கிராமத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு வழங்கப்படவில்லை.

இதனால் தங்களுக்கும் காலை உணவு வழங்க வேண்டும் என நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் உள்ள சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் முதல்வருக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

இதனை வரவேற்கும் விதமாக அப்பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டை எழுதி அனுப்பினர். அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் ஜனநாயக நாட்டில் கோரிக்கை வைத்தால் அது நிறைவேறும் என்பதை தமிழக முதல்வர் நிரூபித்துள்ளார். இதை மாணவர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொண்டோம்’ என குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 22 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் கல்வி பயின்று வரும் 5,380 மாணவர்கள் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். குறிப்பாக ஊரக பகுதிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். காலை நேரங்களில் அவசரம், அவசரமாக வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் இனி தங்களது குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கமுடியவில்லையே என கவலை அடைய மாட்டார்கள். எங்களை போன்ற மாணவர்களை முதல்வரின் காலை உணவு திட்டம் பார்த்து கொள்ளும் என்றனர்.

 

The post அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவ, மாணவிகள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Orathur Chitambaranar Government Aided School ,Chief Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்ட...