×

மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு

சென்னை: வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைனில் வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதி மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் தற்போது செயல்படுத்தி இருக்கிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்தும் விதமாக கர்நாடகம், ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்த அனுமதி பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

அதாவது குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர், ஒயின் மற்றும் பிற மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனுக்கு எதிரானது என தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தகவலை டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது. வீடுகளுக்கே மதுபானம் டெலிவரி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும், இதுபோன்ற எந்த ஒரு புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபடாது, டெட்ரா பேக் எனப்படும் காகித குடுவையில் மதுபானம் விற்கும் திட்டமும் இல்லை என டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tasmac administration ,Maharashtra ,Jharkhand ,Chhattisgarh ,Swiggy ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி