×

முன் ஜாமீன் மனு தள்ளுபடி: ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்த வழக்கில் 3 தனிப்படை தேடுகிறது

சென்னை: ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி  செய்ததாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின்  உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி  ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல்  ஏமாற்றியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் விஜய நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு தமிழக பால்வளத்துறை  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராவ், வி.எஸ்.பலராமன்,  எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் பால்வளத்துறை  அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு  எதிராக புகார் அளித்த விஜய நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண  மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன. தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில்  அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டிருந்தது. இதேபோல புகார் கொடுத்த விஜய நல்லத்தம்பியும் முன்  ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜேந்திர பாலாஜி  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் பெயரை தவறாக பயன்படுத்தியவர், விஜய  நல்லதம்பி என்பவர்தான். எனவே அவர்தான் குற்றவாளி. இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை.  விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவல் துறை  தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி  புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். ராஜேந்திர பாலாஜியின்  உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது தேர்தல் முடிந்தவுடன் தருகிறோம், அமைச்சர் டெல்லி சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் வட்டியுடன் தந்து விடுகிறோம் என்று விஜய நல்லதம்பி கூறியுள்ளார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தவுடன் பணம் கொடுத்தவர்களை பார்க்காமல் தவிர்த்ததுடன் அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.விஜய நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம்  உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து  ஆதாரங்களும் உள்ளதால், இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று  வாதிட்டார். இந்த வழக்கில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பணத்தை இழந்த வேல்பிரதீப் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி எம்.நிர்மல்குமார், இந்த முன்ஜாமீன் மனுக்கள் மீது ேநற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட அதிமுக இளைஞரணியில் யூனியன் செயலாளராக பதவி  வகித்துள்ளார். அவரது நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுபோன்று மோசடி செய்பவர்களையும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களையும் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.கடந்த 2015 முதல் வேலை வாங்கி தருவதாக விஜய நல்லதம்பி பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார். பின்னர் கட்சியிலும், அமைச்சரிடமும் தனக்கு செல்வாக்கு உள்ளதாக கூறி அதை வைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  அவரின் நடத்தைகள் குறித்து புகாரில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி அமைச்சராக பதவி வகித்தவர். தனது செல்வாக்கை பயன்படுத்தி விஜய நல்லதம்பியை தவறாக வழி நடத்தியுள்ளார். இதனால், அப்பாவி நபர்கள் தங்களது பணத்தையும் எதிர்காலத்தையும் இழந்துள்ளனர் என்பதை மறந்துவிட முடியாது.இப்போது, ராஜேந்திர பாலாஜி தான் அப்பாவி என்கிறார். ஆனால், பணத்தை இழந்தவர்கள் தௌிவான முறையில் அனைத்து ஆதாரங்களுடனும் அதாவது வங்கி விபரம், கொடுத்த தொகை, நாள் என்று ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளனர். இது விசாரணையின்போது தெரியவரும்.எப்போதெல்லாம் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் வருவாரோ அப்போதெல்லாம் விஜய நல்லதம்பி அவருடன் சேர்ந்துவிடுவார். அமைச்சரின் ஆள் தான் என்று கூறிக்கொண்டு பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். சரியான விசாரணை மூலம்தான் இந்த குற்றச் செயல்களில் உள்ள கூட்டுச்சதி மற்றும் குற்றச்சாட்டில் உள்ளவர்களின் பங்கு என்ன என்பது தெரிய வரும். இருவர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம்  உள்ளது. எனவே, இருவரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இந்த வழக்கின் விசாரணைக்கு போலீசார் முன்னுரிமை தந்து குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். மேலும், ராஜேந்திர பாலாஜியின் 3 கூட்டாளிகள் மற்றும் புகார் கொடுத்த விஜய நல்ல தம்பி ஆகிய 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுன் ராஜேந்திரபாலாஜியின் வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதால் இந்த உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதி, இதுபோன்ற வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்கள் தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் கடுமையாக பார்க்கும் என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார். இந்தநிலையில் ராஜேந்திரபாலாஜி நேற்று பிற்பகல் முதல் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென தலைமறைவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post முன் ஜாமீன் மனு தள்ளுபடி: ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்த வழக்கில் 3 தனிப்படை தேடுகிறது appeared first on Dinakaran.

Tags : Rajendra Balaji ,Chennai ,Awin ,minister ,Govt ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...